பாம்பனில் பிடிபட்ட அபூர்வ மீனால் ஆபத்துக்கு அறிகுறியா?
1 min read
Is the rare fish caught in Pamban a sign of danger?
7.10.2025
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று இருந்தனர். இந்த மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். அப்போது ஒரு விசைப்படகு மீனவர்கள் வலையில் அரியவகை டூம்ஸ்டே மீன் ஒன்று சிக்கி இருந்தது. இது சுமார் 5 அடி நீளம் கொண்டதாக இருந்தது. இந்த வகை மீன்களை ஆசிய கடல் பகுதிகளில்தான் காண முடியும் எனவும், மிகவும் ஆழ்கடல் பகுதியில் மட்டுமே இருக்கும் எனவும் கூறுகிறார்கள்.
டூம்ஸ்டே மீன் பிடிபட்டால் உலகில் எங்காவது பேரழிவு ஏற்படக்கூடும் என்பது ஜப்பானிய மக்களின் ஒருவித நம்பிக்கை ஆகும். ஆனால் இது மூடநம்பிக்கை என்ற கருத்தும் உள்ளது.
அதாவது 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் சுனாமி மற்றும் பூகம்பம் ஏற்படும் முன் இந்த மீன்கள் அடிக்கடி கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஜப்பான் நம்பிக்கை பிரபலமடைந்தது.
ஆழ்கடலில் வசிக்கும் இந்த மீன்கள் நில அதிர்வு தொந்தரவுகள், காந்த மாற்றங்கள் அல்லது நீருக்கடியில் வாயு வெளியீடுகளின் உணர்திறன் கொண்டவை.
இதனால் இயற்கை மாற்றம் காரணமாக இந்த மீன்கள் மேற்பரப்புக்கு வருகின்றன என சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மீன்களைப் பார்ப்பதால், இயற்கை பேரழிவு ஏற்படும் என்பதற்கான உறுதியான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை.
இந்தநிலையில் பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கி இருக்கும் டூம்ஸ்டே மீன் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகி உள்ளது. ஆனால் இந்த அரிய வகை மீன் மிக குறைந்த விலைக்கே விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.