June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

தங்க முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 21 கோவில்களுக்கு ஆண்டுக்கு ரூ.17.76 கோடி வட்டித்தொகை

1 min read

21 temples to receive Rs. 17.76 crore in interest annually through gold investment scheme

12.10.2025
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதியரசர் துரைசாமி ராஜூ முன்னிலையில் இன்று (12.10.2025) காஞ்சிபுரத்தில், காஞ்சி காமாட்சியம்மன் கோவில், குன்றத்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவில், திருவிடந்தை, நித்திய கல்யாண பெருமாள் கோவில், திருமலைவையாவூர், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் ஆகிய 4 கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத பிரித்தெடுக்கப்பட்ட 53 கிலோ 386 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன் இனங்களை மும்பையிலுள்ள மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் காஞ்சிபுரம் மண்டல மேலாளர் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் மரக்கன்றினை நட்டுவைத்து, அக்கோவிலில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை நேரில் பார்வையிட்டு, குடமுழுக்கு நடத்திடும் வகையில் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பின், ஆன்மிகவாதிகளின் பொற்காலம் என போற்றும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு முனைப்பான திட்டங்களை செயல்படுத்தி, ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெற வேண்டிய கோவில்களை கணக்கிட்டு இதுவரை 3,707 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. மன்னர்கள் மற்றும் நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பொக்கிஷங்களாக திகழும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோவில்களை பாதுகாக்கின்ற வகையில் அவற்றை புனரமைக்க இதுவரை ரூ. 425 கோடியினை அரசு நிதியாக வழங்கியவர் நமது முதல்-அமைச்சர் ஆவார். அரசு நிதி, கோவில் நிதி, உபயதாரர் நிதியின் மூலம் இதுவரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 68 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
இந்த அரசு பொறுப்பேற்றபின் 2021 – 22ம் நிதியாண்டில் 112 அறிவிப்புகள், 2022 – 23ம் நிதியாண்டில் 165 அறிவிப்புகள், 2023 – 24ம் நிதியாண்டில் 249 அறிவிப்புகள், 2024 – 25ம் நிதியாண்டில் 108 அறிவிப்புகள், 2025 – 26ம் நிதியாண்டில் 210 அறிவிப்புகள் என இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு மொத்தம் 844 அறிவிப்புகளை வெளியிட்டு, அதில் 65 சதவீத அறிவிப்புகளை நிறைவேற்றி உள்ளோம்.

கோவில்களில் பக்தர்களிடமிருந்து காணிக்கையாகப் பெறப்பட்டு பயன்படுத்த இயலாத பலமாற்று பொன் இனங்களில் கல், அரக்கு, அழுக்கு நீக்கப்பட்டு, மும்பையிலுள்ள மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி, பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை செம்மையாக செயல்படுத்திடும் வகையில் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதியரசர்கள் துரைசாமி ராஜூ, ரவிச்சந்திர பாபு மற்றும் செல்வி மாலா ஆகியோரின் கண்காணிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், 21 கோவில்களின் பயன்பாடற்ற பொன் இனங்களை உருக்கி கிடைக்கப்பெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் சுத்தத் தங்கக் கட்டிகள் பாரத ஸ்டேட் வங்கியில் அந்தந்த கோவிலின் பெயரில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆண்டொன்றிற்கு 17 கோடியே 76 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வட்டித் தொகையாக கிடைக்கப் பெறுகிறது. இந்த வட்டித் தொகை அந்தந்த கோவிலின் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, மேலும், 13 கோவில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பயன்பாடற்ற 378 கிலோ 619 கிராம் 100 மில்லிகிராம் பலமாற்றுப் பொன் இனங்கள் உருக்காலைக்கு கொண்டு செல்ல தயாராக உள்ளன. அவற்றில் இன்றைய தினம் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலிலிருந்து 42 கிலோ 326 கிராம், குன்றத்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலிலிருந்து 2 கிலோ 640 கிராம், திருவிடந்தை, நித்திய கல்யாண பெருமாள் கோவிலிலிருந்து 4 கிலோ 70 கிராம், திருமலைவையாவூர், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலிலிருந்து 4 கிலோ 350 கிராம் என மொத்தம் 53 கிலோ 386 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன் இனங்கள் இன்றைய தினம் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்று 19 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் குடழுக்கு நடத்திட ஏதுவாக அரசு நிதி ரூ.12.75 கோடி, ஆணையர் பொதுநல நிதி ரூ. 8.99 கோடி, கோவில் நிதி ரூ. 6.84 கோடி, உபயதாரர் நிதி 41 லட்சம் என மொத்தம் ரூ.28.99 கோடி மதிப்பீட்டில் 38 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 12 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதரப் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு வரும் டிசம்பர் மாதம் 8-ம் தேதி குடமுழுக்கு நடப்படும். இந்த அரசு பொறுப்பேற்றபின் கடந்த 4 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றிலே இல்லாத அளவிற்கு உபயதாரர்கள் மட்டும் 11,845 பணிகளுக்கு ரூ.1,528 கோடியை நன்கொடையாக அளித்துள்ளனர்.

இத்கோவிலிலுள்ள 1,000 கால் மண்டபம் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நிலையில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் திறக்கப்பட்டது. அதில் தற்போது நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் நிறைவு செய்து குடமுழுக்கிற்கு பின் பக்தர்கள் சென்று வர அனுமதிக்கப்படும். சாய்ந்த நிலையில் உள்ள முன் கோபுரத்தை புதிதாக கட்டுவதா அல்லது பழுது நீக்கி புனரமைப்பதா என்பதனை மாநில வல்லுநர் குழுவின் அனுமதி பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பௌர்ணமி மண்டபத்தினை புனரமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்த இரண்டு பணிகளும் குடமுழுக்கிற்கு பின் மேற்கொள்ளப்படும். இத்கோவிலின் திருப்பணிகளை விரைவுபடுத்தும் வகையில் தலைமையிடத்திலிருந்து இணை ஆணையர் வான்மதி சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட உள்ளார்.

ஏழை, எளிய மக்கள் குடியிருக்கும் கோவில் குடியிருப்புகளை அவர்களது வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வாடகையை வசூலிக்கும் முறையை பின்பற்றி வருகிறோம். முத்தமிழறிஞர் கருணாநிதி வெளியிட்ட அரசாணையின்படி, குழுவாக ஒரு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்தால் அதனை முறைப்படுத்திட வேண்டும். அந்த ஆணையின்படி 10,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நியாய வாடகை குழு முடிவின்படி நியாயமான வாடகை நிர்ணயம் செய்து கோவிலுக்கு கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில் வழிவகை காணப்படும். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு, பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்த வாடகை தொகை ரூ. 650 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்திலுள்ள கோவில்களை சுற்றி வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதை முறைப்படுத்தி, நிரந்தர தீர்வுக்கு வழி காணப்படும். நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு ரூ.9 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வரும் தங்கத்தேர் வரும் ஜனவரி மாதத்திற்குள் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்திட வெள்ளோட்டம் விடப்படும். அதேபோல் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேரினை அறங்காவலர் குழுத் தலைவர் வேல்மோகன் முழு முயற்சி எடுத்து வெள்ளோட்டத்திற்கு கொண்டு வருவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *