குற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரியலதா ரஜினிகாந்த் மனு தள்ளுபடி
1 min read
Latha Rajinikanth’s plea seeking acquittal from criminal case dismissed
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவருடைய மகள் சவுந்தர்யா இயக்கத்தில் ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் திரைப்படம் கடந்த 2014-ல் வெளியானது. இப்படத்தை மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. படதயாரிப்புக்காக ‘ஆட் பியூரோ அட்வர்டைசிங்’ எனும் நிறுவனத்திடம் இருந்து ரூ.10 கோடியை மீடியா ஒன் நிறுவனம் கடனாக வாங்கி இருந்தது. இதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.
இந்தநிலையில் கடனாக பெற்ற பணத்தை மீடியா ஒன் நிறுவனம் திருப்பித்தரவில்லை எனக்கூறி ஆட் பீயூரோ அட்வர்டைசிங் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ரூ.10 கோடியை வட்டியுடன் திரும்ப வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக லதா ரஜினிகாந்த் தரப்பில் பெங்களூரு கோர்ட்டில் போலி அமைப்பு மற்றும் முகவரி அடிப்படையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக லதா ரஜினிகாந்த் மீது ஹல்சூர் கேட் போலீசார் குற்ற வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்கு பின்னர், பெங்களூரு கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி லதா ரஜினிகாந்த் பெங்களூரு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘என் மீதான குற்றச்சாட்டு தவறானது. அடிப்படை ஆதாரமற்றது. போலீசார் என் மீது தவறாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, அந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த பெங்களூரு கோர்ட்டு, ‘லதா ரஜினிகாந்துக்கு எதிராக வழக்கு தொடர ஆதாரங்கள் உள்ளன என்பது அரசு தரப்பு ஆவணங்கள் மூலம் தெளிவாக தெரிகிறது. வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோருவதற்கு எந்தவித நியாயமான காரணங்களையும் லதா ரஜினிகாந்த் முன்வைக்கவில்லை. எனவே, வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற லதா ரஜினிகாந்தின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது’ என உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம், அடுத்தகட்டமாக லதா ரஜினிகாந்த் இந்த வழக்கின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என அரசு வக்கீல் தெரிவித்தார்.