June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

கிட்னி முறைகேட்டில் மருத்துவமனை மீது ஏன் நடவடிக்கை இல்லை?- எடப்பாடி பழனிசாமி கேள்வி

1 min read

Why is there no action against the hospital in the kidney scam? – Edappadi Palaniswami questions

17.10.2025
தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு கவன ஈர்ப்புத் தீர்மானங்களை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம். காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த 25 குழந்தைகள் மரணம் அடைந்தது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம்.

தமிழ்நாடு அரசின் அலட்சியத்தின் காரணமாக குழந்தைகள் உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது. குழந்தைகளுக்கு மருந்து தயாரிக்கும் அந்த நிறுவனத்தை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணித்திருக்க வேண்டும். மத்தியப் பிரதேச சுகாதாரத்துறை மந்திரி நரேந்திரசிவாஜி படேல், தமிழக சுகாதாரத்துறை மிக அலட்சியமாக செயல்பட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

அந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் திமுக அரசு எந்த சோதனையும் மேற்கொள்ளவில்லை. இது குறித்து கேள்வி எழுப்பினால் சுகாதாரத்துறை அமைச்சர் ஏதேதோ விளக்கம் அளிக்கிறார். 2024, 25 ஆண்டுகளில் அந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏன் சோதனை செய்யவில்லை? 2 ஆண்டுகள் தொடர்ந்து சோதனை செய்யாததால், பல வேதிப்பொருள்கள் கலந்து தயாரித்ததால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கிட்னி முறைகேடு குறித்து நான் சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. புரோக்கரை தான் கைது செய்திருக்கிறார்கள். எந்த மருத்துவமனையில் முறைகேடாக கிட்னி அறுவை சிகிச்சை செய்தார்களோ அந்த மருத்துவமனை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அமைச்சர் ஏதேதோ சொல்லி மழுப்பிவிட்டார். மருத்துவமனை முறைகேட்டில் ஈடுபட்டதால் தான், புரோக்கர்கள், ஏழைகளுக்கு பணத்தாசை காட்டி கிட்னி எடுத்துள்ளனர். இதற்கு மருத்துவமனையும் ஒரு முக்கிய காரணம்.

ஆனால் திமுக எம்எல்ஏவின் சொந்த மருத்துவமனை என்பதால் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிட்னி முறைகேட்டில் யாரெல்லாம் முறைகேடு செய்தார்களே அவர்கள் மீது நடவடிக்க எடுக்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. ஆனால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் 30 லட்சம் மூட்டைகள் சாலைகளில் குவிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யாமல் ஏதேதோ சாக்குபோக்கு சொல்லி தட்டிக்கழிக்கிறார்கள். இன்று நேரமில்லா நேரத்தில் அதிமுக தரப்பில் இது தொடர்பாக வலியுறுத்தப்பட்டது. போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று சொன்னோம்.

இதற்கு முறையாக அமைச்சர் பதில் சொல்லவில்லை. மத்திய அரசு மீது குறைசொல்லி தப்பிக்க பார்க்கிறார்கள். விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை இவர்கள் முறையாக கொள்முதல் செய்வதாகத் தெரியவில்லை. நெல் மணிகள் மழையில் நனைந்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஈரப்பதம் 20 முதல் 22 சதவீதம் வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெற்று அதிமுக அரசு கொள்முதல் செய்தது. இதையெல்லாம் இந்த அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. விவசாயிகள் கடும் துன்பத்திற்கும் வேதனைக்கும் ஆளாகி உள்ளனர். விவசாயிகள் விரோத அரசாக திமுக அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2021 வரை மத்திய அரசின் வரிப்பகிர்வு 1,33,590 கோடி. திமுக ஆட்சியில் இதுவரை மத்திய அரசின் வரிப்பகிர்வு 2,32,723 கோடி ரூபாய். அதிமுக ஆட்சியில் வந்ததை விட கூடுதலாக நிதி பெறப்பட்டுள்ளது. மத்திய திட்ட நிதியும் அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் 25 ஆயிரம் கோடி அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

வரிப்பகிர்வும் அதிகம், கடனும் அதிகமாக வாங்கியிருக்கிறார்கள். திட்டம் எதையும் போடவும் இல்லை. இதைக் கேள்வி கேட்டால் பர்சன்டேஜ் கணக்கைச் சொல்லி மழுப்பப் பார்க்கிறார்கள். ஏனென்றால் திமுக ஆட்சியில் இருப்பவர்கள் பர்சன்டேஜ் வாங்குவதில் கைதேர்ந்தவர்கள். 73 ஆண்டுகாலம் தமிழகத்தை பல்வேறு ஆட்சியாளர்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். இந்த காலத்தில் மொத்தமாக 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டிருக்கிறது. அதில் ஜெயலலிதா 2011-ல் பதவியேற்றபோது திமுக அரசு விட்டுச்சென்ற கடன் 1 லட்சத்து 16 ஆயிரம் கோடி. 2021-ல் நாங்கள் ஆட்சியை விட்டுச் செல்லும்போது 10 ஆண்டு கால ஆட்சியின் கடன் 4.08 லட்சம் கோடி மட்டும் தான்.
ஆனால் 4 ஆண்டு கால ஆட்சியில் திமுக வாங்கிய கடன் 4.52 லட்சம் கோடி. ஆனால், மூலதனச்செலவோ பெரிய அளவில் இல்லை. இந்த கடன் சுமை மக்கள் தலையில்தான் விழும் என்பது நிஜம். இந்த விவரத்தை சொன்னால் நீங்கள் வாங்கிய கடனுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி வட்டி கட்டினோம் என்று நிதியமைச்சர் சொல்கிறார். நாங்கள் வாங்கிய கடனுக்கு அல்ல, நீங்கள் வாங்கிய கடனுக்கும் சேர்த்துதான் அந்த வட்டி இருக்கிறது. ஒவ்வொரு அரசும் வாங்கிய கடனை பின்வரும் அரசு கட்டுவது வழக்கம். அதை வாதமாகப் பேசுவது முறையல்ல.
அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். கல்லூரிகள், தடுப்பணைகள் கட்டினோம். மூலதனச் செலவு அதிகமாக இருந்தது. ஆனால் திமுக அரசில் வருவாய் செலவு அதிகமாகி இருக்கிறது. இந்த கடனை எப்படி திருப்பி செலுத்த முடியும்?

சாத்தூர் நகராட்சியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் தனக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் சாத்தூர் நகராட்சி கமிஷனர் அளித்த விளக்கத்தில் 18 மாதம் கழித்து ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஏன் அவ்வளவு காலம் என்று நீதிபதி கேட்டதற்கு, ‘நகராட்சியில் நிதி இல்லை’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

அதற்கு நீதிபதி, “ஓய்வூதியம் என்பது பரிசல்ல. அது வாழ்நாள் முழுவதும் உழைத்தற்காக பெறப்படும் உரிமை. அவருக்கு ஓய்வூதியம் கொடுக்கும் வரை அதிகாரிகள் சம்பளம் பெறக்கூடாது” என்று உத்தரவிட்டுள்ளார். ஓய்வூதியம்கூட கொடுக்க முடியாத அரசு எப்படி மக்களை காக்கப் போகிறது?

தொழில்துறை அமைச்சர் பாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் 15 ஆயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக கூறினார். ஆனால் அந்த நிறுவனம் அதை மறுத்துள்ளது. இதுதொடர்பான விவாதம் சட்டமன்றத்தில் வந்தபோது தொழில்துறை அமைச்சர், “பாக்ஸ்கானில் பல துணை நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் ஒரு நிறுவனம்தான் தமிழகத்தில் முதலீடு செய்யப்போவதாகச் சொல்கிறார். அப்படியென்றால் பாக்ஸ்கானின் துணை நிறுவனம் எது என்று சொல்லுங்கள். எல்லாமே வெற்று அறிவிப்பு. அத்தனையும் பொய் அறிவிப்பு.

இந்த அரசு அமைந்தபிறகு எவ்வளவு தொழில் தொடங்கப்பட்டுள்ளன என்று வெள்ளை அறிக்கை கேட்டால் அமைச்சர் வெள்ளைத் தாளை காட்டுகிறார். அதுதான் உண்மை. வெள்ளைத்தாள் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் இந்த நாட்டின் நிலை உள்ளது. முதல்வர் ஜெர்மனிக்குச் செல்லும்போது செய்தியாளர்களிடம், “10 லட்சத்து 62 ஆயிரம் கோடி முதலீடு பெற்றுள்ளதாகச் சொன்னார். 77 சதவீதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் சொன்னார். அப்படி நிறைவேற்றப்பட்டிருந்தால் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்கும். ஆனால் அப்படி எந்த சம்பவமும் தமிழகத்தில் நடந்ததாகத் தெரியவில்லை.

பெரிய தொழில் வர 3 ஆண்டுகள் ஆகும். ஆனால் தமிழக முதல்வர் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவுடனே தொழில் தொடங்கியதாக தவறான கருத்தைத் தெரிவிக்கிறார். சுமார் 60 ஆயிரம் கோடிதான் தமிழகத்துக்கு முதலீடு வந்துள்ளதாக மத்திய அரசு அறிக்கை கொடுத்துள்ளது.

சமீபத்தில் தருமபுரிக்குச் சென்ற முதல்வர் இனி விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்துக்குப் போய் மனு கொடுக்க அவசியம் இல்லை. ஆன்லைன் மூலம் பயிர்க்கடன் வாங்கலாம் என்று அறிவித்தார். இதுவரை 4,400 கூட்டுறவு சங்கத்தில் இந்த முறை பின்பற்றப்படவில்லை. மக்களை ஏமாற்றுவதுதான் இந்த அரசின் வேலை.

கடந்த 2021-ம் ஆண்டில் தீபாவளியின்போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். அதில் 10 சதவீத அறிவிப்புகளை கூட நிறைவேற்றவில்லை. அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *