நகரசபை தலைவரானார் கண்ணாயிரம்/நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min read
Kannayairam becomes the city council chairman/comedy story/Tapasukumar
26.10.2025
ஓட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட சுடிதார் சுதா மயங்கிவிழுந்ததால் அனைவரும் அவரை நோக்கி ஓடினர்.இறைச்சி கடைக்காரர் ஓடிவந்து சுடிதார்சுதாவை தூக்கினார். அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தார். அவர் எழவில்லை. கோடீஸ்வரரும் கேப்பைகூழ் டம்ளரில் பாதி குடித்துவிட்டு வேகமாக எழுந்து ஓடிவந்தார்.
சுடிதார்சுதா மயங்கி கிடப்பதைப் பார்த்து, என்ன ஆச்சு என்று பதட்டத்துடன் கேட்க, இறைச்சிக் கடைக்காரர் கண்ணீருடன் பேசினார்.
இந்த சுடிதார் சுதா என் மனைவியின் தங்கை. அவளை எங்கள் மகள் போலவே வளர்த்துவந்தோம். அவள் படித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்துவந்தாள். அப்போது டிப்டாப்வாலிபர் அவளை விரும்பினார். சுடிதார்சுதா இதே போல் ஒரு நாள் மயங்கிவிழுந்தாள். அப்போது அவளுக்கு கேன்சர் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
இதை அறிந்த அவளது காதலன் அவளைவிட்டு போய்விட்டான். இதனால் அவள் மனம் உடைந்து காணப்பட்டாள். அவளது வாழ்நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. தனக்கு கேன்சர் இருப்பதை யாரிடமும் சொல்ல வேண்டாம். நான் இருக்கிற நாளில் மகிழ்ச்சியாக சாகிறேன் என்றாள்.
அவள் மன மகிழ்ச்சிக்காக அவளை குற்றாலம் டூர் அனுப்பினோம். அவள் இளைஞர்களோடு சகஜமாக பேசுவாள். அதை மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு பேசினார்கள். அதைப் பற்றி எல்லாம் அவள் கவலைப்படவில்லை. மகிழ்ச்சியாக இருந்தாள். இப்போது மயங்கிவிழுந்துவிட்டாளே என்று கதற , கோடீஸ்வரர், ஏங்க புற்றுநோயை குணப்படுத்த உயர்ரக மருந்துவந்திட்டு. நான் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. சுடிதார் சுதா ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் காப்பாற்றுகிறேன் என்றவர், டிரைவர் காரை எடுங்க என்றார்.
சுடிதார் சுதாவை காரில் ஏற்றினார்கள். கண்ணாயிரம், பூங்கொடி, இறைச்சிக்கடைக்காரர், பயில்வான் ஆகியோர்காரில் ஏறிக்கொண்டனர்.
கோடீஸ்வரர் காரில் ஏறியதும் கார் சென்னை விரைந்தது.உயர்ரக ஆஸ்பத்திரியில் சுடிதார் சுதா சேர்க்கப்பட்டார். எவ்வளவு செலவானாலும பரவாயில்லை. டாக்டர் இந்த பொண்ணு என் மகாமாதிரி .அவளை காப்பாத்தணும் என்றார்.
டாக்டர் அவரிடம்,கவலைப்படாதீங்க..நாங்கப் பார்த்துக் கொள்கிறோம் என்று அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
கண்ணாயிரமும் பூங்கொடியும் பதட்டமாக இருந்தனர்.
இந்த பொண்ணு தனக்கு இப்படியொரு நோய் இருப்பதை சொல்லாம மறைச்சிருக்கே என்று கண்கலங்கினர்.அங்கே காத்திருந்தனர்.
அதிகாலையில் சுடிதார்சுதா கண்விழித்துப் பார்த்தார். உடனே கோடீஸ்வரர், கண்ணாயிரம், பூங்கொடி, இறைச்சிக்கடைக்காரர், பயில்வான் ஆகியோர் ஓடிவந்துப் பார்த்தனர். சுடிதார் சுதா பாசத்துடன் அவர்களைப் பார்த்தார். பூங்கொடி கண்ணீருடன் சுடிதார் சுதா கைகளைப் பற்றினார். சுடிதார் சுதா உன் நிலை அறியாமல் உன்னைப் பற்றி தவறாகப் பேசிவிட்டேன்.மன்னித்துவிடு” என்றார்.
சுடிதார் சுதா சிரித்தார். அவரிடம்,தங்கச்சி நீ சீக்கிரம் குணமடைஞ்சி வந்திடுவ..கவலைப்படாதே..நம்பிக்கையோடு இரு என்று பூங்கொடி சொல்ல, அவரது கைகளை சுடிதார்சுதா பற்றினார். கண்ணீர் துளி சிதறி ஓடியது. அப்போது டாக்டர் அங்குவந்தார். அவருடன் வந்த நர்சுகள், கூட்டம் போடாதீங்க.. எல்லோரும் போங்க.. பேசண்டை தனியாவிடுங்க என்க அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கண்ணாயிரத்திடம் கோடீஸ்வரர், கண்ணாயிரம் நான் பார்த்துக்கிறன்..நீங்க போயிட்டுவாங்க என்க, கண்ணாயிரம் கண்கள்கசிந்தன.
ஒருநாள் இருந்து பார்த்துவிட்டு செல்கிறோம் என்று பூங்கொடி சொல்ல, கண்ணாயிரமும் ஆமா நாங்க ஒருநாள் இருந்து பார்த்துவிட்டு செல்கிறோம் என்றார்.
கோடீஸ்வரரும் நல்லது என்றார். அன்று கண்ணாயிரம், பூங்கொடி, இறைச்சிக்கடைக்காரர், பயில்வான் ஆகியோர் அங்கு தங்கினர்.
சிகிச்சை பெற்ற சுடிதார் சுதாவை சந்தித்தனர். அவர்,நான் நன்றாக இருக்கிறேன் என்று சொன்னபோது பயில்வான் செல்போனில் ஜவுளிக்கடைக்காரர் பேசினார். என்ன சுடிதார் சுதா நல்லா இருக்கா, பாண்டிச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிச்சிட்டாங்க.நகரசபை தலைவரா நம்ம கண்ணாயிரம் போட்டியிடணுமுன்னு எல்லோரும் சொல்லுறாங்க..அவரை உடனடியா அழைச்சிக்கிட்டு புதுவைக்கு வாங்க என்று சொல்ல, பயில்வான், சரி..நான் சொல்லுறன் என்று செல்போன் இணைப்பை துண்டித்தார்.
என்ன போன் என்று கண்ணாயிரம் கேட்க, அதுவா பாண்டிச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிச்சி இருக்காங்களாம். நகரசபை தலைவர் பதவிக்கு கண்ணாயிரம் போட்டியிடணுமுன்னு சொல்லுறாங்களாம். ஜவுளிக்கடைக்காரர் சொல்கிறார், கண்ணாயிரம் கிளம்புஎன்று சொல்ல, கண்ணாயிரம், ம் தேர்தல் நமக்கு சரிப்பட்டு வராது. ஏற்கனவே தேர்தல் வருமுன்னு சேலை வாங்கிக் கொடுத்து ஜவுளிக்கடைக்காரருக்கு 50 ஆயிரம் பாக்கி கொடுக்க வேண்டியதிருக்கு.. ஆளைவிடுங்கப்பா..எங்கிட்ட காசு இல்ல என்க, சுடிதார் சுதா அவரைப்பார்த்தார்.
கண்ணாயிரம் அண்ண ..இந்த தங்கச்சி சொல்லுறன்.. நீங்க தேர்தலில் போட்டிபோடுறீங்க.ஜெயிக்கிங்க..போங்க.. இது உங்க தங்கையின் ஆசை என்றார்.
கண்ணாயிரம்,ம்..அரசியல் நமக்கு சரிப்பட்டு வராதம்மா..என்க, பூங்கொடி,என்னங்க..சுடிதார்சுதா சொல்லியாச்சு.. அப்புறம் என்ன..தயங்குறீங்க.. தங்கையின் ஆசையை நிறைவேற்ற வேண்டியது அண்ணனின் கடமை. புறப்படுங்க என்றார்.
இறைச்சி கடைக்காரரும் ம்..கண்ணாயிரம் நீங்க புறப்படுங்க..நான் சுடிதார்சுதாவை பாத்துக்கிறன். என் மனைவியும் புதுவையிலிருந்து கிளம்பி இங்கே வருகிறாள். நீங்க கிளம்புங்க என்க, கோடீஸ்வரர் அங்கு வந்தார்.
என்ன சமாசாரம் என்று கேட்க, புதுவையில் நகரசபை தேர்தலில் கண்ணாயிரம் போட்டியிடணுமுன்னு மக்கள் விரும்புறாங்க..அதான் போகச் சொல்லுகிறோம் என்று பயில்வான் சொல்ல, அவர், மக்களுக்கு சேவைசெய்ய அரிய வாய்ப்பு.கண்ணாயிரம் புறப்பட்டு போங்க..உங்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள் .டிரைவர் இங்கே வாங்க.. இவங்களை புதுவையில் கொண்டுபோய் விட்டுவிட்டுவாங்க என்றார்.
கார்டிரைவர் வேகமாக வந்து சரி அய்யா என்றார்.
கண்ணாயிரம், பூங்கொடி,பயில்வான் ஆகியோர் காரில் ஏற, கார் புதுவையை நோக்கிவிரைந்தது.
கண்ணாயிரம் தேர்தல் சிந்தனையில் இருந்தார்.
கார் புதுவை வந்து சேர்ந்தது. கண்ணாயிரம் வீட்டு முன் மக்கள் கூட்டம். கண்ணாயிரத்தைப் பார்த்ததும், கண்ணாயிரம் வாழ்க, கண்ணாயிரம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கோஷமிட்டனர். ஜவுளிக்கடைக்காரர் ஓடிவந்து கண்ணாயிரம் கைகளை குலுக்கி நீங்க போட்டியிட வேண்டும் என்றார்.
கண்ணாயிரம் அவரிடம்,உங்களுக்கு நான் ஐம்பதாயிரம் பாக்கி தரணுமே என்க, ஜவுளிக்கடைக்காரர் சிரித்தபடி, அதெல்லாம் அருவாஅமாவாசை தந்துட்டார்.. அது பிரச்சினை இல்லை. நீங்க போட்டியடணும் என்று வலியுறுத்தினார். அருவா அமாவாசையும்,மாப்பிள்ளை நீங்க..கண்டிப்பா போட்டியிடணும். அடுத்தவாரம் மனுத்தாக்கல்..என்று சொல்ல, கண்ணாயிரம்,பதில் சொல்லாமல் நின்றார்.
உடனே ஜவுளிக்கடைக்காரர், மவுனம் சம்மதத்துக்கு அடையாளம்.கண்ணாயிரம் போட்டியிடுகிறார்.. வெற்றி..வெற்றி என்று கோஷமிட்டபடி சென்றார்.
ஒருவாரம் கழிந்தது.வேட்பு மனுத்தாக்கல் நாள் வந்தது.கண்ணாயிரம் மக்களுடன் ஊர்வலமாக சென்று நகரசபை தலைவர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து, மோட்டார்சைக்கிள் வாலிபர் உள்பட நான்குபேர் மனுதாக்கல் செய்தார்கள். கண்ணாயிரம் விழித்தார்.என்னை எதிர்த்து மோட்டார்சைக்கிள் வாலிபர் போட்டியிடுகிறாரே..என்று யோசிக்க, பயில்வான், கண்ணாயிரம்ஒண்ணும் கவலைப்படாதே.. எல்லா ஓட்டும் உனக்குதான் விழும் என்றார்.
கண்ணாயிரம் அவரிடம், நீங்க நிக்கச் சொல்லிதான் நான் தேர்தலில் நிக்கிறேன். மக்கள் ஓட்டு எனக்கு விழுமா.. மோட்டார் சைக்கிள் வாலிபர் டிசைன் டிசைனாகப் பேசி மக்களை ஏமாத்தப் பாப்பான் என்க, பயில்வான் சிரித்தார்.
மோட்டார் சைக்கிள் வாலிபருக்கு ஐந்து ஓட்டுகூட விழாது. தைரியமாக இரு என்று பயில்வான் தைரியம் கூறினார்.
மோட்டார் சைக்கிள் வாலிபர் தீவிர பிரசாரம் செய்தார். கண்ணாயிரம் படிப்பு 8_ம் வகுப்பு பெயிலு. ஆனா கட்அவுட்டுல கண்ணாயிரம் பி.ஏ என்று போட்டார். இப்படி மோசடி பேரவழிக்க நீங்கள் வாக்களிக்கலாமா.. நான் ஏழைகளின் காவலன். உங்களின் தலைவன். எனக்கு வாக்களியுங்கள் என்று பிரசாரம் செய்தான்.
அடப்பாவி..கண்ணாயிரம் பி.ஏ. என்று கட்அவுட் வைத்தது நீ. அந்த கட்அவுட் வைத்தே என்னை கவிழ்க்கப் பாக்கிறீயா என்று கண்ணாயிரம் கொந்தளித்தார்.
அவரும் வேனில் சென்று பிரசாரம் மேற்கொண்டார். நான் மக்களின் வேட்பாளர். நீங்கள் ஆணையிட்டதால் நான் தேர்தலில் நிற்கிறேன். எனது வெற்றி..உங்கள் வெற்றி என்று கூறினார்.
மக்களின் மனதை அவரது வரிகள் கவர்ந்தன.
தேர்தல்நாள் வந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துவாக்களித்தனர். பெண்வாக்காளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மோட்டார்சைக்கிள் வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கும் இங்கும் சென்றபடி வெற்றி எனக்குதான். மக்கள் முகத்தில் என் முகம் தெரிகிறது என்று சொல்லிக்கொண்டு திரிந்தார்.
இரண்டு நாள் கழித்து ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
தொடக்கத்தில் இருந்தே கண்ணாயிரம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார். முன்னணி அறிவிக்கப்பட்டபோது அருவாஅமாவாசை வெற்றி, வெற்றி என்று குதித்தவாறு பட்டாசு வெடித்தார்.
இறுதி சுற்று ஓட்டு எண்ணி அறிவிக்கப்பட்டது. ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் கண்ணாயிரம் வெற்றி என்று அறிவிக்கப்பட்டது.மக்கள் ஆரவாரம் செய்தனர்.
மோட்டார் சைக்கிள் வாலிபர் மூன்று ஓட்டுகள் மட்டும் வாங்கி இருந்தார். அவர் வெட்கப்பட்டு மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து சென்றார்.
கண்ணாயிரத்தை மக்கள் தோள்மீது தூக்கிவைத்து,கண்ணாயிரம் வாழ்க,கண்ணாயிரம் வாழ்க என்று கோஷமிட்டனர்.
அருவாஅமாவாசை ஓடிவந்து கண்ணாயிரம் கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்தினார்.பூங்கொடி ஆனந்த கண்ணீர் வடித்தபடி சிரித்தார்.
ஒருவாரம் கழித்து பதவி ஏற்பு விழா.புதுவை நகரசபை தலைவராக பதவி ஏற்க கண்ணாயிரம் காரில் ஊர்வலமாக வந்தார்.வழியில் பெருந்தலைவர் காமராஜர் சிலை, சிவாஜிகணேசன் சிலை, பெரியார் சிலை, அண்ணா சிலை,எம்.ஜி.ஆர் சிலை,அம்பேத்கார்சிலை, பாரதியார் சிலை, மற்றும் பல்வேறு தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
இறுதியில் நகராட்சி அலுவலகத்தில் தலைவராக பதவி ஏற்றார்.எதிரே கரகோஷம் கேட்டது.அங்கு சுடிதார்சுதா,பூங்கொடி, அருவாஅமாவாசை,பயில்வான்,ஜவுளிக்கடைகாரர்,மோட்டார் சைக்கிள் வாலிபர் கைத்தட்டி வாழ்த்திய வண்ணம் நின்றனர்.
வெளியில் மக்கள் கூட்டம் அலை மோதியது.கண்ணாயிரம் வாழ்க என்று கோஷமிட்டனர்.
நகரசபை தலைவர் கண்ணாயிரத்தின் பணி தொடங்கியது. கோடீஸ்வரர் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.மக்கள் சக்தி மகத்தானது. உங்கள் பணி தொடரட்டும் என்று சொல்ல,கண்ணாயிரம் ,ஏழை மக்களின் கல்வி உயர்வான திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்டார். வெற்றி என்ற முழக்கம் எங்கும் கேட்டது.
கண்ணாயிரம் வீட்டுக்கு வந்தார்… தான் டூர் போகும்போது தன்னை வரவேற்றவர்களை நினைத்துப்பார்த்தார். அனைவருக்கும் மனதார நன்றி தெரிவித்தார். அதோடு தான் வளர இந்த அளவுக்கு உறுதுணையாக இருந்து தற்போது அமரராகிவி்ட்ட சிவராஜை நினைத்து வணங்கினார். தன்னுடைய வாழ்க்கை எல்லோருக்கும் ஊக்கம் தரும். இதை படித்த அனைவரும் என்னைப்போல் வாழ்வில் உயருவார்கள். நன்றி என்றார். (மகிழ்ச்சியுடன் நிறைவு பெற்றார் கண்ணாயிரம்)
-வே.தபசுக்குமார்.புதுவை.