June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

மகளே மல்லிகா( சிறுகதைகள்)-மணிமேகலை பதிப்பகம் வெளியிட்டது

1 min read

Daughter Mallika (Short Stories) – Published by Manimekalai Publishing House

11.11.2025
நான் கடையம் பாலன். நான் எழுதிய “மகளே மல்லிகா” என்ற சிறுகதை தொகுப்பு நூலை மணிமேகலை பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். இதில் 31 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் எதிர்பாராத முடிவுகளோடு தனித்தனி கருத்துக்களை கொண்டுள்ளது.
இந்த புத்தகத்திற்கு தினத்தந்தி முதன்மை செய்தி ஆசிரியராக பணியாற்றிய அமுதன் என்ற தனசேகரன் அவர்கள் வாழ்த்துரை எழுதியுள்ளார். அது சிறந்ததோர் அணிந்துரையாக விளங்குகிறது.
அதனை இங்கே தருகிறேன்….

வாழ்த்துரை
——————————–
இலக்கிய உலகில், சிறுகதைகளுக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு. சிறுகதைகள் இப்படித்தான் எழுதப்பட வேண்டும் என்ற எழுதப்படாத இலக்கணமும் அதற்கு இருக்கிறது.
சமூகம் சார்ந்ததாகவும், சமுதாயத்தின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல், ஓர் அழகியல் தன்மையையும் கொண்டு இருக்கும் சிறுகதைகள், போற்றப்படுகின்றன – பரந்த வாசிப்புக்கு உட்படுகின்றன.
ஒரு சில பக்கங்களில் எழுதப்பட்டாலும், அவற்றைப் படித்த தாக்கத்தால், மீள் நினைவாக அந்தக் கதைகளை மனதில் ஓடவிடும் பொழுதெல்லாம் நம்மைச் சிந்திக்கத் தூண்டும் அடர்த்தியும், ஆற்றலும் அந்தக் கதைகளுக்கு இருக்க வேண்டும்.
‘பல பக்கங்களுக்கு, நீளமாக இழுத்துச் செல்ல வேண்டிய கதையைச் சுருக்கமாக ஒரு சில பக்கங்களில் வடிவமைக்கத்தான் அதிக காலம் பிடிக்கும்’ என்று சிறுகதை எழுத்தாளர் ஹென்றி டேவிட் டோரோ குறிப்பிட்டு இருப்பதை, சிறுகதைகளை எழுத முயலுபவர்கள் அனுபவத்தில் உணரலாம்.
‘திருமண நிகழ்வு என்பது ஒரு நாவல் என்றால், கண நேரத்தில் பிறக்கும் காதல் ஒரு சிறுகதை’ என்று அறிஞர் லாரி மூர் கூறி இருப்பது சாலப் பொருத்தமானது.
இத்தகைய கோட்பாடுகள் அனைத்தையும், எழுத்தாளர் திரு. கடையம் பாலன் எழுதி இருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு உள்ளடக்கி இருக்கிறது.
சமுதாயத்திற்குச் சொல்ல வேண்டிய கருத்தைக் கொண்ட கருவையும், அதற்கு ஏற்ற கதைக் களத்தையும், கற்பனைக் கதாபாத்திரங்களையும் உருவாக்கி, அவை அனைத்தும் மனதில் நீடித்து நிற்கும் வண்ணம் படைக்கும் திரு. கடையம் பாலனின் திறன், இதில் உள்ள அத்தனைச் சிறுகதைகளிலும் வெளிப்பட்டு இருக்கிறது.
குழந்தைத் தொழிலாளர்கள் தொடர்பாக பல்வேறு இடங்களில் கடைபிடிக்கப்படும் பல விதமான அளவீடைச் சாடும் ‘விருது’ என்ற சிறுகதை, எதனையும் எதிர்பாராமல் சேவை செய்பவர்களை சமுதாயம் எப்படிப் பார்க்கிறது என்பதை விளக்கும் ‘கறை படிந்தவன்’ என்ற சிறுகதை, தத்தெடுத்து வளர்த்த தந்தை மீது கதாநாயகன் காட்டும் அபாரமான பாசத்தைப் பறைசாற்றும், ‘ஊருவிட்டு ஊரு வந்து…’ என்ற சிறுகதை உள்ளிட்ட அனைத்துச் சிறுகதைகளும் படிப்பவர் மனதை ஆட்கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
ஊரில் திருடுபோன பிள்ளையார் சிலை, எங்கு இருந்தாலும் சிறப்புடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்ட கிராமத்து வாலிபனின் செயல், எதிர்பாராத திருப்பத்துடன் காட்டப்பட்டு இருப்பது மனதைக் கவரும் என்பதோடு பலருக்குப் படிப்பினையைக் கொடுக்கும்.
இப்படியே ஒவ்வொரு கதையையும் பற்றிய மதிப்புரையைத் தருவது என்றால், அதுவே நீண்ட உரையாகிவிடும் என்பதால், சிறுகதை இலக்கணத்துக்கு உட்பட்டது போல, இந்த வாழ்த்துரையையும் சுருக்கமான அளவில் அமைக்க விரும்புகிறேன்.
அனைத்துக் கதைகளும் உங்கள் ஆர்வத்துக்குத் தீனி போடும் வகையில் இருக்கும் என்ற உறுதிமொழியை மட்டும் ஒட்டுமொத்தமாகத் தெரிவிக்கக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
நான் ஊடகத் துறை பணியில் இருந்த காலத்தில், என்னுடன் இணைந்து பணியாற்றியவர்களில் ஒருவரான திரு. கடையம் பாலனிடம் அபாரமான திறமைகள் புதைந்து இருக்கின்றன என்பதை நேரில் கண்டுணர்ந்தவன் என்ற முறையில், திரு. கடையம் பாலன் அளித்து இருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு, அந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் என்று தெரிவித்து, அவர் இது போல மேலும் பல படைப்புகளை தமிழ் இலக்கிய உலகுக்கு வழங்க வேண்டும் என்ற எனது விருப்பமுடன் கூடிய வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நூலை சென்னையில் பதிப்பாசிரியர் லேணா தமிழ்வாணன் அவர்கள் வெளியிட தனசேகரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
புத்தகம் வேண்டுவோர் மணிமகேலை பதிப்பகத்தாரையோ அல்லது என்னையோ தொடர்புகொள்ளலாம்.
-கடையம் பாலன்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *