June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

ராஜபாளையம் கோவில் காவலாளிகளைக் கொன்ற குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்

1 min read

Police arrest suspect who killed Rajapalayam temple guards

12.11.2025
தென்காசி மாவட்டத்தின் கடைசிப்பகுதியும் விருதுநகர் மாவட்டத்தில் ஆரம்ப பகுதியாகவும் உள்ள சேத்தூர் தேவதானம் பகுதியில் உள்ள பழமையான நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பணியாற்றிய இரண்டு காவலாளிகள் நள்ளிரவில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் அதிகாலையில் குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரை அடுத்த தேவதானம் பகுதியில் அருள்மிகு நச்சாடை தவிர்த்த அருளியசுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக இந்த கோவில் உள்ளது. இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

இந்த கோவிலில் தெற்குத் தேவதானம் பகுதியைச் சார்ந்த பேச்சிமுத்து (வயது 50) வடக்கு தேவதானம் பகுதியை சேர்ந்த சங்கர பாண்டியன் (வயது 65) ஆகியோர் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளனர். இருவரும் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு கோவில் காவல் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில் பகல் நேர காவலாளியான மாடசாமி நேற்று அதிகாலையில் கோவிலுக்கு சென்ற போது அங்கே இரவு நேர காவலாளிகள் பேச்சிமுத்து சங்கர பாண்டியன் இருவரும் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாடசாமி உடனடியாக சேத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த சேத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

அப்போது கோவில் கொடிமரம் அருகே இரவு நேர கோவில் காவலர்கள் பேச்சிமுத்து சங்கர பாண்டியன் இருவரும் பிணமாக கிடந்தனர். கோயிலில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் உடைக்கப்பட்டும், கேமரா பதிவு உள்ள டி.வி.ஆரையும் கொள்ளையர்கள் கையோடு எடுத்துச் சென்றனர். கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டு இருந்தது.

மேலும் அங்கே பிணமாகக் கிடந்த பேச்சிமுத்து சங்கர பாண்டியன் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியது.

பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையிலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் சேத்தூர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் கொலை வழக்கில் நாகராஜ் என்பவருக்கு தொடர்விருப்பதை கண்டறிந்தனர் உடனடியாக தொடர்புடைய நாகராஜை போலீசார் தேடினர். அப்போது ஒரு இடத்தில் பதுங்கி இருந்த நாகராஜை போலீசார் சுற்றுவளைத்து கைது செய்தனர். அப்போது நாகராஜ் போலீசாரின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்ற போது போலீசார் வேறு வழியில்லாமல் நாகராஜின் காலில் சுட்டனர். இதனால் காலில் காயம் அடைந்து கீழே விழுந்த நாகராஜனை போலீசார் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி தகவலறிந்த மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார், எஸ்பி கண்ணன் ஆகியோர் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் எஸ்பி கண்ணன் தலைமையில் போலீசார் முதல் கட்ட விசாரணையை நடத்தி வருகிறார்கள்.மேலும் விருதுநகரில் இருந்து தடையவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ள போலீசார் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்தக் கோவிலில் உண்டியல் சேதப்படுத்தப்பட்டுள்ளது எனவே உண்டியலில் இருந்த பணம் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா கோவிலில் இருந்த நகைகள் மற்றும் பழமையான சாமி சிலைகள் எதுவும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றியும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்த கொலை சம்பவத்தில் நாகராஜ் மட்டும் ஈடுபட்டாரா? அல்லது இவரது கூட்டாளிகள் வேறு யாரும் உள்ளார்களா? என்பது பற்றியும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *