சபரிமலையில் தரிசனத்திற்கு கட்டுப்பாடு
1 min read
Restrictions on darshan at Sabarimala
கார்த்திகை மாதத்தையொட்டி பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கார்த்திகை மாதம் முதல் நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், இன்றும் பக்தர்கள் கூட்டம் எதிர்பார்த்த அளவை விட அதிகரித்தது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சபரிமலை தேவசம்போர்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, சபரிமலை ஐயப்பன் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் வருவதால் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கூட்டம் காரணமாக நேற்று 30 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட்ட ஸ்பாட் புக்கிங்கில் இனி தினமும் 20 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இனி 20 ஆயிரம் பேருக்கு மேல் வந்தால் மறுநாளில்தான் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
ஸ்பாட் புக்கிங்கிற்காக நிலக்கல்லில் புதிதாக 7 முன்பதிவு மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
சன்னிதானத்தில் வரிசை குறைந்தால் மட்டுமே நடப்பந்தலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களில் தினமும் 70 ஆயிரம் பேர் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.