ஏவிஎம் சரவணன் காலமானார்-முதல்வர் உள்ளிட்டோர் இரக்கல்
1 min read
AVM Saravanan passes away – Chief Minister and others express condolences
வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்த சினிமா தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று (டிச.,04) காலமானார். அவருக்கு வயது 86.
திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் ஏவிஎம் நிறுவனத்தின் நிறுவனத்தின் இயக்குநர் ஏவிஎம் சரவணன்,86. இவர் தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவர் இன்று வடபழநியில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். தற்போது ஏவிஎம் ஸ்டுடியோவில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இவரது உடல் இன்று மாலை 3 மணிக்கு மேல் ஏவிஎம் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏவிஎம் சரவணன் நேற்றுதான் தனது 86வது பிறந்த நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவரது உடலுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகியவர் ஏவிஎம் சரவணன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க ஏவிஎம் நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவிஎம் சரவணன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவிஎம் நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ – அதே அளவுக்கு ஏவிஎம் நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் சரவணன் அவர்களுடைய பங்கும் அளப்பரியது.
புதல்வராகவும் – திரைத்துறை ஆளுமையாகவும் “அப்பச்சி” என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை மதிப்பிற்குரிய ஏவிஎம் அவர்களுக்குப் புகழ் சேர்த்தவர் சரவணன். பேரறிஞர் அண்ணாவின் “ஓர் இரவு”, தலைவர் கலைஞரின் “பராசக்தி”, முரசொலி மாறனின் “குலதெய்வம்” என ஏவிஎம் நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏவிஎம் சரவணன்.
கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் ஏவிஎம்-மின் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார். அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏவி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.