June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

1 min read

Nanjil Sampath joins Thaweka

5.12.2025
மேடைப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தமிழக வெற்றிக் கழகத்தில் அதன் தலைவர் விஜய் முன்னணியில் இணைந்தார். கடந்த சில நாட்களாகவே விஜய்க்கு ஆதரவாக பேசிவந்த நாஞ்சில் தற்போது தவெகவில் இணைந்துள்ளார். திராவிட சித்தாந்தம் கொண்ட இவர் தவெகவில் இணைந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடவேண்டிய முக்கிய விஷயம்.

யார் இந்த நாஞ்சில் சம்பத்?

துரை வைகோ போலவே எப்போதும் கழுத்தில் துண்டுடன் இருப்பவர் நாஞ்சில் சம்பத். மதிமுக மேடைகளில் அதிகம் முழங்கியவர். முதலில் திமுகவில் இருந்த இவர் வைகோ திமுகவில் இருந்து வெளியேறிய பொழுது, அவருடன் இணைந்து வெளியேறியவர். பின் மதிமுகவில் 19 ஆண்டுகள் பயணித்தார். அங்கிருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் திமுகவில் இணைய ஆர்வம் காட்டினார். ஆனால் திமுகவால் கண்டுகொள்ளப்படவில்லை. பின் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத் கூறியதாவது:-

“கொள்கை எதிரி என பாஜகவை கூறியதில் இருந்து அவர் பின்வாங்கவில்லை. பாஜக ஆதரவு தொடர்பான விமர்சனங்கள் குறித்து விஜய்யிடம் பேசினேன். அதற்கு, “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அதிகாரத்தில் இருக்கும் கட்சி. தேர்தல் இங்கு நடக்கப்போகிறது. அதனால் திமுகவை கூர்மையாக விமர்சிக்கிறேன். பாஜகவிற்கு நேரம் வரும்பொழுது பார்த்துக் கொள்ளலாம்” என தெரிவித்தார்.

மல்லை சத்யா அழைத்தார். நான்தான் திராவிட வெற்றிக் கழகத்தில் இணையவில்லை. அதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறது. திமுகவில்தான் ஆயுள் முழுவதும் பணியாற்ற வேண்டும் என நினைத்தேன். ஆனால் வைகோ வெளியேறியதால் வெளியேறினேன். அவர்கள் என்னை நீக்கவில்லை. நான் பிரச்சாரம் செய்தே வாழ்ந்தவன் என்பதால், அந்த வாய்ப்பை விஜய்யிடம் கேட்டுள்ளேன். திமுகவையும், பாஜகவையும் ஒரேநேரத்தில் எதிர்க்கும் துணிச்சலையே நான் பாராட்டுகிறேன். எதிர்ப்பவர் ஏன் கேள்வி கேட்கவில்லை என்பதை அவரிடம்தான் கேட்கவேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:-
“ஜெயலலிதா மறைந்தபின் எந்த அரசியல் கட்சியிலும் என்னை இணைத்துக் கொள்ளாமல் இருந்தேன். பெரியார், அண்ணா இலட்சியங்களை பேசி வந்த நான் இன்று தவெகவில் இணைந்துள்ளேன். நாடு முழுவதும் பரப்புரை செய்ய விஜய் எனக்கு அனுமதி தந்துள்ளார். என்னைப் பார்த்து நான் உங்கள் ரசிகர் என விஜய் கூறினார். உடனே மெய்சிலிர்த்து போனேன். தொலைக்காட்சி தொடர் ஒன்றில் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தேன். அதிலிருந்து என்னை வசைபாடினார்கள். இதனால் மனமுடைந்துபோனேன்.

திமுகவின் அறிவுத் திருவிழாவில் திட்டமிட்டு என்னை நிராகரித்தனர். எந்த பரிந்துரைக்கும் திமுகவினர் முன் நான் சென்று நிற்பதில்லை. கேட்டால் சைக்கிள்கூட தரமாட்டார்கள். கடந்த கால காயங்களில் இருந்து விடுபட்டவனாக உணர்கிறேன். தவெகவில் இணைந்துள்ளேன். உற்சாக மனநிலையில் உள்ளேன்.” என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

“நான் இயங்குவதற்கான வாய்ப்பை விஜய் வழங்கியிருக்கிறார். தவெகவில் திராவிடம் உள்ளது. பெயரில் இல்லாமல் இருக்கலாம். தமிழ் தேசியமும், திராவிட தேசியமும் ஒன்றுதான். திராவிட இயக்கத்தின் நீட்சியாகவே விஜய்யை பார்க்கிறேன். தேர்தல் அறிக்கை வரும்போது விஜய் கொண்டுவரும் மாற்றங்கள் குறித்து தெரியவரும். லட்சக்கணக்கான இளைஞர்களை மூலதனமாக வைத்திருக்கும் ஒரே இயக்கம் தமிழக வெற்றிக் கழகம்தான்.

இளைஞர்களை வைத்துக்கொண்டு அதிரடி மாற்றங்களை செய்வதற்கு விஜய்யிடம் திட்டம் இருக்கிறது என நம்புகிறேன். திருப்பரங்குன்றம் சம்பவம் தொடர்பாக ஏன் பேசவில்லை என்பது குறித்து விஜய்யிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அதுகுறித்து விஜய் பேசாமல் இருப்பது ஒருவகையில் நல்லது. இதில் ஒரு தரப்புக்கு ஆதரவாகவும், ஒரு தரப்புக்கு எதிராகவும் கருத்து சொல்லாமல் இருப்பது விஜய்க்கு நல்லது.” என தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *