June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

ரூ.332.46 கோடியில் 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் – முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

1 min read

Chief Minister lays foundation stone for 10 modern paddy storage complexes

10.12.2025
ரூ.13.97 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்களை திறந்து வைத்து, ரூ.332.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.12.2025) தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம் – சேந்தமங்கலம், நீலகிரி மாவட்டம் – பந்தலூர், திருவண்ணாமலை மாவட்டம் – கீழ்பெண்ணாத்தூர் ஆகிய வட்டங்களில் 7,000 மெட்ரிக் டன் கொள்ளளவில் 13.97 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்களை திறந்து வைத்தார்.

மேலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 332 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அனைவருக்கும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களை சேமித்து வைத்திடும் நோக்குடன் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையிலும், உணவுப் பாதுகாப்பின் அங்கங்களான சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை நவீன முறையில் சேமித்து வைத்திடவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பினை வட்ட அளவில் உறுதி செய்யவும், பொதுவிநியோகத் திட்டத்தின் பயன்பாட்டிற்கான தானியங்களின் சேமிப்பிற்கான கொள்ளளவினை அதிகப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டத்தில் 4.97 கோடி ரூபாய் செலவில் 2000 மெ.டன் கொள்ளளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்குகள், நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் 4.50 கோடி ரூபாய் செலவில் 2500 மெ.டன் கொள்ளளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்குகள், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டத்தில் 4.50 கோடி ரூபாய் செலவில் 2500 மெ.டன் கொள்ளளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்குகள், என மொத்தம் 13.97 கோடி ரூபாய் செலவில் 7000 மெ.டன் கொள்ளளவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 3 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தியாகி கொள்முதல் செய்யப்படும் “ஒரு நெல்மணிக்கூட வீணாகக்கூடாது” என்ற தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உயரிய சிந்தனையை செயல் வடிவமாக்கும் விதமாக மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், நடுவூர் கிராமத்தில் 170.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,00,000 மெ.டன் கொள்ளளவிலும், நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் வட்டம், திருக்கண்ணபுரம் கிராமத்தில் 29.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20,500 மெ.டன் கொள்ளளவிலும், திருக்குவளை வட்டம், மணக்குடி கிராமத்தில் 22.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 17,000 மெ.டன் கொள்ளளவிலும்,

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், பரசலூர் கிராமத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9,000 மெ.டன் கொள்ளளவிலும், தரங்கம்பாடி வட்டம், வில்லியநல்லூர் கிராமத்தில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 21,000 மெ.டன் கொள்ளளவிலும்;

கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், டி.புடையூர் கிராமத்தில் 12.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9,500 மெ.டன் கொள்ளளவிலும் மற்றும் திட்டக்குடி வட்டம், தாழநல்லூர் கிராமத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11,000 மெ.டன் கொள்ளளவிலும்;

திருவண்ணாமலை மாவட்டம், மேல்பெண்ணாத்தூர் வட்டம், செங்கம் கிராமத்தில் 17.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12,000 மெ.டன் கொள்ளளவிலும், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், கோவிலம்மாபட்டி கிராமத்தில் 12.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9,000 மெ.டன் கொள்ளளவிலும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஜூஜூப்பள்ளி கிராமத்தில் 12.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9,000 மெ.டன் கொள்ளளவிலும்;

என மொத்தம் 2,18,000 மெ.டன் கொள்ளளவில், 332 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *