கரூர் நெரிசலில் 41 பேர் பலி: மதுரை அமர்வு விசாரித்த வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரித்தது எப்படி?-சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
1 min read
Karur stampede: How did the Madras High Court hear the case heard by the Madurai bench? – Supreme Court questions
12.12.2025
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இதுபற்றி கரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
இதற்கு எதிராகவும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரியும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. விசாரணையை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டது.
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். அதேபோல் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகியும் கரூர் சென்று நேரில் ஆய்வு செய்தார். இந்த நிலையில் கரூர் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் சென்னை ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவும், மாநில அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையமும் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். ‘அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் நோக்கம் என்ன? சென்னை ஐகோர்ட்டு கரூர் சம்பவம் தொடர்பாக ரிட் மனுவை விசாரித்ததில் சில தவறுகள் உள்ளன. சென்னை ஐகோர்ட்டு விசாரணை நடைமுறையில் தவறுகள் உள்ளது என்றே கருதுகிறோம்.
மதுரை அமர்வு விசாரித்து வந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு பிரதான அமர்வு விசாரித்தது எப்படி? மதுரை கிளை விசாரித்து இருக்க வேண்டிய விவகாரம் குறித்த கேள்விக்கு சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் பதில் அளித்துள்ளார். அது ஏன்’ என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.
அதற்கு தமிழக அரசு சார்பில், ‘அருணா ஜெகதீசன் ஆணையத்தை தொடர அனுமதிக்க வேண்டும். அதற்கான தடையை நீக்க வேண்டும். கூட்ட நெரிசல் சம்பவம் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க பரிந்துரைகளை ஒருநபர் ஆணையம் வழங்கும். எதிர்காலத்தில் கூட்டங்கள் நடத்த விதிமுறைகளை வகுப்பதற்கும், நிவாரணம் பரிந்துரைக்கவுமே ஆணையம் அமைக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், மதுரை ஐகோர்ட்டு கிளையில் விசாரணை நடக்கும் நிலையில் சென்னை ஐகோர்ட்டு வழக்கை எப்படி எடுத்தது என சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் அறிக்கை தர உத்தரவிட்டனர். ஐகோர்ட்டு பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்த பிறகு பின்னர் அதுகுறித்து விசாரிக்கலாம்.
பதிவாளர் தாக்கல் செய்யும் அறிக்கையை அனைத்து தரப்புக்கும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
பின்னர் இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.