August 31, 2026

Seithi Saral

Tamil News Channel

“நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றீர்களே?”-திமுக மீது விஜய் தாக்கு

1 min read


“You said we will cancel the NEET exam?” – Vijay attacks DMK

18.12.2025
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே ‘மக்கள் சந்திப்பு’ என்ற பெயரில் இன்று (டிசம்பர் 18) நடந்த பிரசார கூட்டத்தில் விஜய் பேசியதாவது:-
மஞ்சள், மஞ்சள் பொதுவாக நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது மஞ்சள் எடுத்து வைத்து தான் ஆரம்பிப்பார்கள். நம்ம வீட்டில் கூட அம்மா, அக்கா, தங்கைகள் நமக்காக, நாம் நல்ல இருக்க வேண்டும் என்பதற்காக, மஞ்சள் புடவை கட்டி கொண்டு தான் வேண்டி கொள்வார்கள். மஞ்சள் என்றாலே தனி ‘வைப்’ தான்.

நம்ம தவெக கொடியில் கூட அந்த எனர்ஜிட்டிக்கான மஞ்சள் இருக்கிறது. அந்த மாதிரி மங்களகரமான மஞ்சள் விளையும் பூமி இந்த ஈரோடு பூமி. இங்க வந்து மஞ்சள் பற்றி பேசாமல் வேற எங்க போய் பேசுவது? இங்க ஒரு மகத்தான மனிதர் பற்றி நாம் பேசி ஆக வேண்டும்.
இந்த ஈரோடு மண் விவசாயத்திற்கு பெயர் போன மண், இங்க நடக்கிற விவசாயத்திற்கு மிக முக்கியமான கவசமாக இருப்பது காலிங்கராயன் அணை, கால்வாய். அணை கட்டியதிலும், கால்வாய் வெட்டியதிலும் உணர்வு பூர்வமான நிறைய விஷயங்கள் இருக்கிறது.

இந்த அணை கட்டும் போது அவர் சோர்வு அடைந்துவிட்டார், அப்போது அவங்க அம்மா சொன்னாங்களாம், மகனே காலிங்கா, தயிர் விற்ற காசு தாழ்வாரம் வரைக்கும் இருக்கிறது, மோர் விற்ற காசு, முகடு வரைக்கும் இருக்கிறது. அதை எடுத்து கொண்டு அணையை கட்ட தைரியம் கொடுத்தார்களாம். பெத்த அம்மா கொடுக்கும் தைரியம் இருக்கு பாருங்கள், அதை தாண்டி வேற ஏதுமே கிடையாது. ஒரு மனிதனால் எதையும் சாதித்து காட்ட முடியும்.
அப்படி ஒரு தைரியத்தை தான், இப்பொழுது நீங்கள், என்னுடைய அம்மா, அக்கா, தங்கைகள், நண்பா, நம்பிகள், நண்பர்கள் எல்லோரும் எனக்கு அந்த தைரியத்தை கொடுத்து இருக்கிறீர்கள், துணையாக இருக்கிறீர்கள்.

இதை பிரிப்பதற்காக என்ன அவதூறுகளை எல்லாம் விஜய் மீது சொல்லி மக்களை நம்ப வைக்கலாம், என்ன எல்லாம் சூழ்ச்சிகளை செய்து மக்களை நம்ப வைக்கலாம் என்று, இப்படி சூழ்ச்சிகளை மட்டும் நம்புகிற சூழ்ச்சிக்கார கூட்டங்கள் தொடர்ந்து இதை செய்து கொண்டு தான் இருக்கிறது. அவங்களுக்கு தெரியாது, இது, இன்னைக்கு வந்த உறவு அல்ல.
33 ஆண்டுகளுக்கு மேல இருக்கிற உறவு. சினிமாவுக்கு நான் வந்த போது வயது 10, அப்போது இருந்தே இந்த உறவு ஸ்டார்ட் ஆகி இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. நீங்க என்ன செஞ்சாலும் இந்த விஜய்யை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். மக்கள் கூடவே இருப்பார்கள் என்று அவர்களுக்கு தெரியாமல் போச்சு.

உங்களை நம்பி தான் வந்து இருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன். அண்ணாதுரை, எம்ஜிஆர் தமிழகத்தின் சொத்து. அவர்களை பயன்படுத்துவது குறித்து யாரும் கம்ப்ளைன்ட் செய்ய முடியாது. தனியாக சொந்தம் கொண்டாடி யாரும் அழுதுகொண்டு இருக்கக் கூடாது. நாங்கள் ஒரு வழியில் அரசியல் செய்து கொண்டு போயிட்டு இருக்கிறோம். உங்களுக்கு தவெக ஒரு பொருட்டு இல்லை என்றால் ஏன் கதறுகிறீங்க?

மக்கள் எல்லாத்தையும் உன்னிப்பாக கவனித்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் சொல்கிறேன். உங்களுக்கு நீங்கள் கொள்ளையடித்து வைத்திருக்கும் காசு தான் துணை; எனக்கு என் மீது எல்லையில்லா அன்பு வைத்திருக்கும் ‘மாஸ்’ (மக்கள்) தான் துணை. நமக்கு துணையாக இருக்கும் ஈரோடு மக்களுக்காக குரல் கொடுக்க வந்து இருக்கிறேன்.

நமது அரசியல் எதிரி, கொள்கை எதிரி திமுக. எதிரிகள் யார் என்று சொல்லிவிட்டு களத்திற்கு வந்து இருக்கிறோம். அதனால் களத்தில் இருப்பவர்களையே எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்களையும் எதிர்க்கும் ஐடியா இல்லை பாஸ். நீங்கள் கேட்கிறீர்கள் என்பதற்காக எதிர்த்து கொண்டு இருக்க முடியாது. எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. எத்தனை எத்தனை பொய்யான வாக்குறுதிகள், வந்த உடனே நீட் தேர்வை ரத்து செய்வோம். கல்வி கடனை ரத்து செய்வோம் என சொன்னாங்களே செஞ்சாங்களா? எப்பொழுதும் இப்படிதான், சொல்கிறது ஒன்று, செய்கிறது ஒன்று.
விஜய் என்ன அரசியல் பேசவில்லை. சினிமா டயலாக் மாதிரி பேசுகிறார். விஜய் என்ன 10 நிமிடம் தான் பேசுகிறார். பஞ்ச் டயலாக் பேசுகிறார், 10 நிமிடம் தான் பேசுகிறார், 9 நிமிடம் தான் பேசுகிறார் என்று சொல்கின்றனர். நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன சார்?

ஆனால் அதனை இலவசம், ‘ஓசி’ என்று சொல்லி அசிங்கப்படுத்துகிறார்கள். இதனை கேள்வி கேட்க நான் இருக்கிறேன். இந்த விஜய் எப்பொழுதும் மக்கள் பக்கம் தான், இந்த மக்களும் எப்பொழுதும் எனது பக்கம் தான்.

எனது மக்கள் மானத்துடன், கவுரவத்துடன் வாழ வேண்டும். வாயில் வடை சுடுவதற்கு நாங்கள் திமுக அல்ல; தவெக. எல்லோருக்கும் நிரந்தரமான வீடு இருக்க வேண்டும் என்று சொன்னேன். அவங்க எங்கள் ஆட்சியில் வீடு கட்டி கொடுத்துவிட்டோம் என்று சொல்கிறார்கள். இங்க யாரும் வாடகை வீட்டில் இல்லையா?

திமுக ஒரு தீயசக்தி; தீயசக்தி, தீயசக்தி, தீயசக்தி… தவெக ஒரு துாயசக்தி. தூயசக்தி தவெகவுக்கு, தீயசக்தி திமுகவுக்கு தான் போட்டியே, மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியான எங்களால் மட்டும் தான் முடியும்.

தமிழகத்தில் ஆட்சி செய்யும் நீங்களும், மத்தியில் ஆட்சி செய்வர்களும் சரி முதலில் நீங்கள் என்னுடை கேரக்டரை புரிந்து கொள்ள வேண்டும்.

நான் பேசினால் சினிமா டயலாக், என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டிக்கிறீங்கன்னு முதல்வர் ஸ்டாலின் பேசியது, சினிமா டயலாக் இல்லயா? அது என்ன சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்தா பேசினீர்கள்? சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, பொய் வாக்குறுதி என எதில் உங்கள் கேரக்டரை புரிந்து கொள்ள வேண்டும்.
என்னுடைய கேரக்டர் என்று சொன்னது மக்களுடைய கேரக்டர், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் கேரக்டரே வேற மாதிரி, அதை நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டால் மக்கள் புரிய வைப்பார்கள். நம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நிச்சயம் சார், மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம் சார். நண்பா, நம்பி எல்லோரும் பாதுகாப்பாக வீட்டுக்கு போய்விடுங்கள், எனக்கு எல்லாவற்றையும் விட நீங்கள் தான் முக்கியம்.
இவ்வாறு விஜய் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *