“ஈரோடு கடப்பாரை பெரியார்”- சீமானை விமர்சித்து விஜய் பேச்சு
1 min read
“Periyar is the one who killed Erode” – Vijay’s speech criticizing Seeman
18.12.2025
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டது. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு வந்த விஜய்க்கு, வழிநெடுக தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
இக்கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், “ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார் நமது கொள்கை தலைவர். ஈரோடு கடப்பாரை பெரியார். தமிழ்நாட்டையே திருப்பிப் போட்ட நெம்புகோல். 100 ஆண்டுகளுக்கு முன்பே வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கேட்டவர் பெரியார்” என்று புகழ்ந்து பேசினார்.
மேலும் பேசிய விஜய், “எதிரிகள் யார் என்று சொல்லிவிட்டுதான் வந்திருக்கிறோம். அதனால் அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். அதுவும் 2026 தேர்தலில், களத்தில் இருப்பவர்களைதான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாதவர்களையும் எதிர்ப்பதற்கான எந்த ஐடியாவும் இல்லை” என்று தெரிவித்தார்.
காலத்தில் இல்லாதவர்களை எதிர்க்க மாட்டோம் மற்றும் ஈரோடு கடப்பாரை பெரியார் என்று விஜய் பேசியது சீமானை விமர்சிக்கும் வையில் உள்ளது என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்-சின் ‘விஜில்’ அமைப்பு சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பாரதியார் குறித்தும், பெரியார் குறித்தும் பேசியிருந்தார். “பார்ப்பனர் என்ற கடப்பாரையை கொண்டு திராவிடத்தை இடித்து தள்ளுவேன்” என்று அவர் பேசியிருந்தார்.
பார்ப்பனர் என்ற கடப்பாரையை கொண்டு திராவிடத்தை இடித்து தள்ளுவேன் என்று சீமான் பேசியதற்கு எதிர்வினையாக தான் ஈரோடு கடப்பாரை பெரியார் என்று விஜய் பேசியுள்ளதாக இணையத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். ஆவேசமாக பேசிய விஜய், தனது உரையை முடித்ததும் பிரசார வாகனத்தில் இருந்தபடியே தொண்டர்களுடன் செல்பி வீடியோ எடுத்தார். தொடர்ந்து அவருக்கு தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வெள்ளி செங்கோல் வழங்கி கவுரவித்தார்.
இந்த நிலையில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “நன்றி ஈரோடு” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.