ஆவுடையானூரில் எஸ்.ஐ.ஆர். மூலம் பலருக்கு வாக்குச்சாவடி மாற்றம்
1 min read
Many people in Avudaiyanur have their polling stations changed through SIR.
14.12.2025
தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையானூர் ஊராட்சிக்கு உட்பட்ட வைத்தியலிங்கபுரம் பகுதியில் சுமார் 1000 வாக்காளர்கள் உள்ளனர். புதிய எஸ்ஐஆர் பணிகள் மூலம் இவர்களது வாக்குச்சாவடி
ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செட்டியூர் பகுதியில் உள்ள வாக்கு சாவடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையானூர் ஊராட்சி வைத்திலிங்கபுரம் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்கள் அனைவரும் இதுவரை அதே பகுதியில் உள்ள அருணாசலனார் தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது நடைபெற்றுள்ள வாக்காளர் தீவிர திருத்த பணி மூலம் உள்ளூரில் வாக்களித்த வாக்காளர்களுக்கு இப்போது சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செட்டியூர் வாக்கு சாவடிக்கு மாற்றம் செய்திருப்பதால் அந்த பகுதி மக்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அவர்கள் குடியிருக்கும் பகுதியில் வாக்குச்சாவடி இருந்தாலே வாக்களிக்க வெளியில் வர மறுக்கும் வாக்காளர்கள் இனிமேல் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்றால் எப்படி வருவார்கள். என்கிற அச்சம் வாக்காளர்களுக்கு மட்டுமல்ல அந்தப் பகுதியில் உள்ள அரசியல் கட்சியினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஆவுடையானூர் பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர் மாரியப்பன் வருவாய்த் துறையைச் சார்ந்த ஒரு அதிகாரியிடம் கேட்டபோது இது உங்கள் ஊரில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இது போன்ற
பிரச்சனைகள் உள்ளது. என்று தெரிவித்துள்ளார். இதை அறிந்த அனைத்து அரசியல் கட்சியினரும் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய வாக்காளர் திருத்தம் மூலம் வாக்காளர்களின் பெயர்களை நீக்குவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இப்போது வாக்குச்சாவடியை மாற்றி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்களோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது
இதனால் அரசியல் கட்சியினர் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலை கூர்ந்து கவனித்து வருகிறார்கள். இனிமேல் நாளுக்கு நாள் இதுபோன்ற பிரச்சனைகள் தலை தூக்கும் என்பது நிச்சயமாக தெரிகிறது.
எனவே சமூக ஆர்வலர் ஆவுடையானூர் மாரியப்பன் இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தமிழக தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு ஒரு புகார் மனுவை அனுப்பி உள்ளார். அந்த மனுவில் ஆவுடையானூர் ஊராட்சிக்கு உட்பட்ட வைத்திலிங்கபுரம் பகுதி வாக்காளர்களுக்கு செட்டியூர் பகுதியில் வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக எஸ் ஐ ஆர் பதிவில் உள்ளது எனவே உடனடியாக வைத்திலிங்கபுரம் பகுதி மக்கள் ஏற்கனவே அவர்கள் வாக்களித்து வந்த அதே வாக்குச்சாவடியில் வாக்களிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த மனுவினை அனுப்பியுள்ளார்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு வைத்தியலிங்கபுரம் பகுதி மக்களுக்கு ஏற்கனவே அவர்கள் வாக்களித்த அதே அருணாசலனார் தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
எனவே அனைத்து அரசியல் கட்சியினரும் உடனடியாக புதிதாக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலை சரிபார்த்து எந்தெந்த வாக்குச்சாவடிகள் மாற்றப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் நல்லது என்று சமூக ஆர்வலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.