திமுக தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் கருத்து கேட்க செயலி-மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்
1 min read
MK Stalin launches app to solicit public feedback on DMK election manifesto
3.1.2026
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
எல்லார்க்கும் எல்லாம் என்ற சீரிய சிந்தனையோடு ஆட்சி செய்து வரும் கழகத்தலைவர், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கழகத்தின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பொருட்டு , கழகத் துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., தலைமையில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி, எழிலன், முன்னாள் எம்.பி டிகேஎஸ் இளங்கோவன், அப்துல்லா, கார்த்திகேய சிவசேனாபதி, கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜி. சந்தானம், தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம் ஆகிய 12 பேர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்திருந்தார். இக்குழுவினர் பொதுமக்கள் , வணிகர்கள், விவசாயிகள், இளைஞர்கள் , பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாக சந்தித்து பரிந்துரைகளை பெரும் பொருட்டு தமிழ்நாடு முழுக்க பயணம் செய்ய உள்ளனர்.
துவக்க நிகழ்வாக அண்ணா அறிவாலயத்தில் இன்று (03.02.2026 சனிக்கிழமை) கழகத் தலைவர் பொதுமக்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பெறும் வகையிலான அலைபேசி எண், வலைதள விவரம், சமூக வலைதள தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு வலைவாசல் (portal) ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார்.
பொது மக்கள் கீழ்கண்ட தளங்களின் மூலம் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் கழகத்திற்கு வழங்கலாம்.
தொலைபேசி: 08069446900
வாட்ஸ்அப் (WhatsApp): 9384001724
மின்னஞ்சல்: [email protected]
இணையதளம்: http://www.dmk.in/ta/manifesto2026
சமூக வலைத்தளங்கள்: dmkmanifesto26
செயற்கை நுண்ணறிவுத் தளம்: tnmanifesto.ai
2021 – திமுக தேர்தல் அறிக்கையில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றம். வாக்குறுதிகளில் இது 80 சதவீதம்
2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 505 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டில் இருக்கின்றன. 40 அறிவிப்புகள் அரசின் பரிசீலனையில் இருக்கிறது. மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் இது 80 சதவீதம் ஆகும்.
மீதமுள்ள 101 வாக்குறுதிகளில் 37 வாக்குறுதிகள் மத்திய பாஜக அரசு ஒத்துழைக்காததால் நிலுவையில் உள்ளன. குறிப்பாக நீட் தேர்வு ரத்து, திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பது போன்ற வாக்குறுதிகள் மத்திய அரசின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே நிறைவேற்றப்படக் கூடிய வாக்குறுதிகள் ஆகும்.
64 திட்டங்கள் தற்போது நடவடிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படாத சூழல் உள்ளது. உள்ளூர் போராட்டங்கள்- ஒத்துழைப்பின்மை, தேவைப்படாத சூழல் நிலவுவது போன்ற காரணங்களால் இந்த 64 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்படாமலேயே பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி (கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யும் நோக்கில், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் இல்லம் அருகே கற்பிக்கும் திட்டம்), எண்ணும் எழுத்தும் திட்டம் (எட்டு வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பிழையின்றி படிப்பதும், எழுதுவதும் உறுதி செய்ய உருவாக்கப்பட்ட திட்டம்), புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், நாம் முதல்வன், திறனறித் தேர்வுத் திட்டம் (10ம் வகுப்பு மாணவர்கள் இந்த தேர்வு எழுதி வெற்றிபெற்றால் கல்லூரிக் கல்வி வரை மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம்), தோழி விடுதி திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், பசுமை தமிழ்நாடு இயக்கம் (Green Tamil Nadu Mission), தாயுமானவர் திட்டம், அன்புக் கரங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம், கலைஞரின் கனவு இல்லம், மகளிர் பெயரில் சொத்து பதிவு செய்யப்பட்டால் முத்திரை கட்டணத்தில் 1 சதவீதம் சலுகை, மகளிர் பெயரில் மட்டுமே நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் ஒதுக்கீடு, உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்கள் வாக்குறுதியாக சொல்லப்படாதவை.
தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு அடுத்து அமையவிருக்கும் திராவிட மாடல் 2.0 அரசுக்கான தேர்தல் அறிக்கையை முனைப்புடன் தயாரித்து வருகிறது கழகம். திராவிடமாடல் 2.o அரசில் மக்களின் குரல்களும் வலுவாக ஒலிக்க வேண்டும் என்பதால் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை, பரிந்துரைகளை வழங்கி திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பில் எல்லோரும் பங்கு பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து
தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.