சபரிமலையில் அலைமோதும் கூட்டம்- 8 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம்
1 min read
Devotees throng Sabarimala – Waiting up to 8 hours to have darshan
7.1.2026
சபரிமலை அய்யப்பன் கோவிலில் வரும் 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 30-ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. உற்சவ நிகழ்ச்சிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடை திறந்து இதுவரை 42 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இதன்படி சபரிமலை வழித்தடங்களில் இதுவரை இல்லாத கூட்டம் காணப்படுகிறது. எரிமேலியில் இருந்து பெருவழிப்பாதை, பம்பை, கணபதி கோவில், மரக்கூட்டம், அப்பாச்சிமேடு, பெரிய நடைப்பந்தல் உள்ளிட்ட பகுதிகளிலும் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. குறிப்பாக சந்நிதானத்தில் இருந்து மரக்கூட்டம் வரை ஒதுங்கக்கூட இடம் இல்லாத நிலையில் நெரிசல் ஏற்பட்டது.
சபரிமலையில் அலைமோதும் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக பக்தர்கள் 18-ம் படி ஏறி சாமி தரிசனம் செய்ய 5 முதல் 8 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பக்தர்களின் வருகை அதிகரித்ததை தொடர்ந்து கேரள ஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து உடனடி தரிசன முன்பதிவு எண்ணிக்கை தினசரி 2 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.
இதனிடையே சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மகர ஜோதியை காண சன்னிதானம், பாண்டித்தாவளம் உள்ளிட்ட இடங்களில் இப்போதே தற்காலிக கூடாரங்கள் அமைத்து ஓய்வு எடுத்து வருகிறார்கள். இதனால் சன்னிதானம், பம்பை, மணப்புரம் போன்ற இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
பம்பையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. நெரிசலை தவிர்க்க சாமி தரிசனம் முடித்த பக்தர்கள் உடனுக்குடன் மலையிறங்குமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.