June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வாலிபர் கொலை- தலைவர்கள் கண்டனம்

1 min read

Youth murdered at Kilpauk hospital – leaders condemn

12.1.2026
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதி என்ற இளைஞர் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, சூர்யா மற்றும் அவர் நண்பர்களான அலிபாய், கார்த்திக் ஆகிய மூன்று பேர் சேர்ந்து இந்தக் கொலையை செய்ததாக உறுதிப்படுத்தியிருக்கிறது. அரசு மருத்துவமனையில் உள்ளே புகுந்து செய்யப்பட்ட இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் கூட பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனையான, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்திலேயே, பல்வேறு குற்ற வழக்குகள் கொண்ட ஆதி என்ற நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தலைநகரில்,அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்துள்ள இந்தப் படுகொலை, திமுக ஆட்சியில் காவல்துறை முழுமையாக செயலிழந்துவிட்டதை நிரூபிக்கிறது.

தலைநகரின் மையப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொலை நடக்கிறது என்பது, காவல்துறையின் தோல்வி மட்டும் அல்ல. திமுக அரசின் நிர்வாகத் தோல்வி. கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களை, விரல் விட்டு எண்ணி விடலாம். எதிர்க்கட்சியினரைப் பழி வாங்க மட்டுமே காவல்துறையைப் பயன்படுத்தி, தமிழகக் காவல்துறையை முற்றிலுமாக முடக்கி வைத்திருப்பதுதான் திமுக அரசின் ஒரே சாதனை.

வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், குழந்தைகள், மாணவ மாணவியர், இளைஞர்கள் என, யாருமே திமுக ஆட்சியில் பாதுகாப்பாக உணரவில்லை. அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு வழங்க முடியாத இந்த திமுக ஆட்சியில், பொதுமக்கள் எங்கே பாதுகாப்பாக இருப்பது?

துண்டுச்சீட்டில் யாரோ எழுதிக் கொடுப்பதை, திமுக அரசின் சாதனை என்று மேடையில் வாசிப்பது மட்டும்தான் முதல்-அமைச்சரின் பணி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். மாநில அரசின் முதல் பணியான சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றத் தெரியாமல், மேடைகளில் ஏறிப் பொய் சொல்ல அசிங்கமாக இல்லையா? என அதில் பதிவிட்டுள்ளார்.


தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு உள்ள லட்சணத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. ஏற்கனவே, எலிகள், நாய்களை உலவ விட்டு, பொதுமக்களின் உயிரைப் பறிக்கும் நோய்களின் கூடாரமாக மாற்றி அரசு மருத்துவமனைகளைச் சீரழித்தது போதாதென்று, தற்போது ரவுடிகளுக்கு இடையிலான சண்டைக்களமாக மாற்றி, அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களின் பாதுகாப்பை அடியோடு பறித்துள்ளது திமுக அரசு.

இது ஒருபுறமிருக்க பள்ளியில் கொலை, நீதிமன்ற வாயிலில் கொலை, காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு என அரசு நிறுவனங்கள் அத்தனையிலும் தனது துருப்பிடித்த இரும்புக் கரத்தினால் மக்கள் பாதுகாப்பை சிதைத்துள்ளது திமுக அரசு. காலங்கள் மாறும்போது காட்சிகளும் மாறுவது போல திமுக அரசால் உருவான கொலையுதிர் காலத்திற்குத் தேர்தல் காலத்தில் முற்றுப்புள்ளி வைப்பர் தமிழக மக்கள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதி என்ற இளைஞர் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிர்காக்கும் மருத்துவமனைகளைக் கூட மக்களுக்கு பாதுகாப்பில்லாத கொலைக்களங்களாக திமுக அரசு மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த பெண்மணியை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக இன்று அதிகாலை மருத்துவமனைக்கு வந்த ஆதி என்ற இளைஞரை, தலைக்கவசம் அணிந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் மகப்பேறு பிரிவுக்குள் புகுந்து கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளது. இந்தக் கொலையை செய்த கூலிப்படையினரை காவல்துறையினரால் இது வரை கைது செய்ய முடியவில்லை.
கொலை செய்யப்பட்ட ஆதி மீது கொலை வழக்கு உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகைய பின்னணி கொண்டவர்கள் 24 மணி நேரமும் காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும். அவ்வாறு வைக்கப்பட்டிருந்தால் அவர் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

ஆயிரக்கணக்கான நோயர்கள் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால், கூலிப்படையினர் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவுக்குள் நுழைந்து கொடூரக் கொலையை நிகழ்த்தியிருக்க முடியாது. கொலையாளிகள் தப்பி ஓடியதைக் கூட காவல்துறையால் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளை கண்காணித்தல், மருத்துவமனைக்கு பாதுகாப்பு அளித்தல் என இரு அடிப்படை பணிகளிலுமே காவல்துறை தோல்வி அடைந்து விட்டது.

கிண்டி மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக் குத்து, தஞ்சாவூர் அரசு பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை என புனிதமாக மதிக்கப்பட வேண்டிய இடங்களில் கூட படுகொலைகள் நிகழும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கை திமுக அரசு சீர்குலைத்திருக்கிறது. கொலை நடக்காத நாள்களே இல்லை என்ற நிலை மாறி ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 கொலைகள் நடக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கை திமுக அரசு சீர்லைத்திருக்கிறது.

தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்கான ஒரே வ்ழி திமுகவை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றுவது தான். பாதுகாப்பான தமிழகம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து திமுகவை விரட்டியடிப்பார்கள் என்பது உறுதி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *