சாத்தூர் நீதிமன்ற பெண் பணியாளருக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
1 min read
Demonstration condemning the injustice inflicted upon a female employee of the Sattur court.
7.10.2026
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் குற்றவியல் நடுவர் எண்-II நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வரும் திருமதி. செல்வீஸ்வரி மீது ஏற்பட்டுள்ள பணிச்சூழல் தொடர்பான பிரச்சினை மற்றும் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து, தென்காசி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் இன்று (07.10.2026) மாலை 5.45 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாத்தூர் குற்றவியல் நடுவர் எண்-II நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் செல்வீஸ்வரி , கடந்த 06.10.2026 அன்று காலை 8.30 மணியளவில் நீதிமன்ற குடியிருப்பு வளாகத்தில் வைத்து எறும்பு பொடி அருந்தி தற்கொலைக்கு முயன்று , பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, நீதிபதி குடியிருப்பில் பணிபுரியும் நீதிபதியின் குடும்பத்தினருக்கு வேலை செய்வது மட்டுமல்லாமல் அவருடைய மனைவியின் வயதான தாயாருக்கும் பணிவிடை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்
மேலும் கடந்த மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை மற்றும் நள்ளிரவு வரை வீட்டு வேலைகளை செய்ய சொல்லி காலதாமதமாக வீட்டுக்கு அனுப்புவது உள்ளிட்ட காரணங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
மேற்கண்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பணியாளருக்கு உரிய நியாயம் மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும், சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் நீதித்துறை ஊழியர்களின் பணிச்சூழல் மற்றும் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தியும், அரசுப் பணியாளர்களை அவர்களது அதிகாரப்பூர்வ பணிகளுக்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது, இரவு நேரங்களில் நீண்ட நேரம் பணியாற்றச் செய்வதை தவிர்க்க வேண்டும், ஊழியர்களுக்கு உரிய காலத்தில் சம்பளம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் மாநில அமைப்பின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், தென்காசி மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.