June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

வைத்திலிங்கம் தி.மு.க.வில் இணைந்தார்- எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா

1 min read

Vaithilingam joins DMK – MLA resigns from post

21.1.2026

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுப்பட்ட அ.தி.மு.க. என்ற கோஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தி வருகிறார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலோ, கூட்டணியிலோ சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் முக்கிய தலைவர்கள் மாற்று கட்சிக்கு தாவி வருகிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்ட மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினமா செய்து சமீபத்தில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். அதேபோல், பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்று குரல் எழுப்பி அ.தி.மு.க.வில் இருந்து வெளியே வந்த செங்கோட்டையன், ஆரம்ப காலக்கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தங்களை த.வெ.க.வில் ஐக்கியமாக்கி கொண்டனர்.
இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். திமுகவில் இணைவதற்கு முன்பாக , தனது எம்.எல்.ஏ பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்துள்ளார். ஒரத்த நாடு தொகுதி எம்.எல்.ஏவாக வைத்திலிங்கம் இருந்து வந்தார்.

திமுகவில் இணைந்த பிறகு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: –
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்படுவது உகந்ததாக இல்லை. இன்று தமிழ்நாடு முதல்வரை தமிழக மக்கள் போற்றுகிறார்கள். எல்லாருடைய தேவைகளையும் பூர்த்தி செய்து மக்கள் மனதில் உள்ளார் ஸ்டாலின்.

அதனால் அண்ணா தொடங்கிய தாய்கழகத்தில் இணைந்துள்ளேன். அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை. சர்வாதிகாரமாக செயல்படுகிறது. கூட்டணி தொடர்பான முடிவில் ஓபிஎஸ் தாமதம் செய்ததால் திமுகவில் இணைந்துள்ளேன்.அதிமுகவில் சேருமாறு தனிப்பட்ட முறையில் அழைப்பு வந்தது ஆனால் தனியாக இணைய விரும்பவில்லை. பிரிந்தவர்கள் ஒன்றாக சேர வேண்டும் என்ற நோக்கில் நான் அதிமுகவிற்கு செல்லவில்லை”
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *