June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

உதயநிதி ராஜினாமா செய்திருக்க வேண்டும்-அண்ணாமலை பேட்டி

1 min read

Udhayanidhi should have resigned – Annamalai interview

‘பாஜவுக்கும் ஏ.ஆர்.ரகுமானுக்கும் என்ன சம்பந்தம்? அவர் மீது பாஜக.வுக்கு எந்த கோபமும் இல்லை. அவர் கருத்து அவருடையது. எங்கள் கருத்து எங்களுடையது. இதில் திமுக எம்பி கனிமொழிக்கு என்ன தான் பிரச்னை,” என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: தமிழக துணை முதல்வர் உதயநிதியை நீதிபதி எவ்வளவு கடுமையாக சாடி இருக்கிறார் என்பது தெரியும். உயர் நீதிமன்றத்தின் கண்டிப்பை தொடர்ந்து உதயநிதி துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். உதயநிதியின் பேச்சு இனப்படுக்கொலைக்கு ஆதரவானது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திமுகவுக்கு ஒத்து ஊதும் இயக்கமாக கம்யூனிஸ்டு மாறிவிட்டது. கறிக்கோழி பிரச்னைக்கு திமுக அரசே காரணம். ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த பேட்டியை நான் பார்த்தேன்.
எங்கு போனாலும் கூட மேடையில் தமிழ் மொழியில் தான் பேசுவார். எல்லா புகழும் இறைவனுக்கு என்று சொல்லி நம்மை தொடர்ந்து பெருமைப்படுத்தி கொண்டிருக்கும் மனிதர். அவர் பேசியதில் ஒரு வரியை எடுத்து, அதை ஏது ஏதோ பண்ணி தேவையில்லாமல் சிலர் பிரச்னை செய்கிறார்கள்.
அதில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் எல்லோருக்குமே அவர்கள் பேசுவதற்கான கருத்து வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் சுதந்திரமாக பேசலாம். பேசட்டும் ஒன்றும் தவறு கிடையாது. ஏ.ஆர்.ரகுமானை பொறுத்தவரை இன்றைக்கு ராமாயணம் படத்துக்கும் ஹான்ஸ் சிம்மர் உடன் இசை அமைக்கிறார்.

ஹான்ஸ் சிம்மர் ஒரு சாதாரண ஆள் இல்லை. உலகத்தின் முதன்மை இசையமைப்பாளர். ஏர்.ஆர். ரகுமானை பொறுத்தவரை எல்லாவிதமான படத்திற்கும் இசை அமைக்கிறார். அவர் சொல்லி இருப்பது சினிமா துறையில் அதிகார மாற்றம் எப்படி இருக்கிறது, குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் மாறி இருக்கிறது என்று சொல்கிறார்.
அது அவருடைய கருத்தாக தான் நான் பார்க்கிறேன். அவர் பாஜக பின்னணயில் இருக்கிறது என்று எங்குமே சொல்லவில்லை. அந்த முழு பேட்டியையும் நான் பார்த்தேன். நான் ஏ.ஆர்.ரகுமானின் ரசிகன். எப்படி இளையராஜாவை மதிக்கிறேனோ, அப்படி ஏ.ஆர்.ரகுமானையும் மதிக்கிறேன். அவருடைய கருத்தாக தான் பார்க்கிறேன்.

ஒருத்தர் பேசும் கருத்துக்கு எல்லாம் எல்லோரும் எப்படி கோபப்பட்டு பேசலாம் என்றால் இந்த நாட்டினை நடத்த முடியாது. எதிர்க்கருத்துகளும் இருக்கட்டும். ஏ.ஆர்.ரகுமான் பேசிய கருத்து சரி, தவறு என்று நான் சொல்லவில்லை. அந்த கருத்தை பேசுவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்று தான் நான் சொல்கிறேன்.

அதேநேரத்தில், ஏ.ஆர்.ரகுமான் ஒரு விளக்கத்தை கொடுத்த பிறகு, இந்த பிரச்னை முடிந்ததாக பார்க்கிறேன். ஏ.ஆர்.ரகுமானை பொறுத்தவரை அவர்களை புண்படுத்த வேண்டாம், கிரியேட்டிவ் பீல்டில் இருக்கிறார்கள். இன்னும் பெரிய இசைகளை எல்லாம் அவர்கள் வெளியிட வேண்டும்.

மக்களை மகிழ்விக்க வேண்டும். தமிழகத்தின் அடையாளமாக தொடர்ந்து திகழ வேண்டும். கிரியேட்டிவ் பீல்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் கருத்து சொல்வதற்கு உரிமை இருக்கிறது. அந்த கருத்து எனக்கு சில இடத்தில் உடன்பாடாக இல்லை என்றால் அவர்களை தீட்டி தீர்க்க எனக்கு உரிமை இல்லை. இதில் கனிமொழிக்கு என்னதான் பிரச்னை என்று தெரியவில்லை.

பாஜகவுக்கும் ஏ.ஆர்.ரகுமானுக்கும் என்ன சம்பந்தம்? அவர் மீது பாஜகவுக்கு எந்த கோபமும் இல்லை. அவர் கருத்து அவருடையது. எங்கள் கருத்து எங்களுடையது. எங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் மீது மதிப்பும் மரியாதையும் இருக்கும் போது, சில அரசியல்வாதிகள் ஏன் பாஜக- ஏ.ஆர்.ரகுமான்(மோதல்) என்று மாற்ற பார்க்க வேண்டும். அது அவசியமே இல்லை.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *