விஜயின் ஜனநாயகன் பட தீர்ப்பு தேதி அறிவிப்பு
1 min read
Vijay’s Janyayan movie verdict date announced
23.1.2026
ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் ஜன.27ல் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளிக்கிறது. அதன் பின்னரே படம் எப்போது வெளியாகும் என்று தெரியும் என்பதால் நடிகர் விஜய் ரசிகர்கள் உச்சபட்ச எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
அரசியலில் கால்பதித்துள்ள நடிகர் விஜய் தமது திரைவாழ்வின் படமாக ஜனநாயகன் படத்தை அறிவித்துள்ளார். பொங்கல் நாளில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் தணிக்கை சான்று பெறுவதில் சிக்கல்களை சந்தித்தது.
படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தணிக்கை வாரியம் மறுத்து, படத்தை மறுஆய்வு செய்யவும் பரிந்துரைத்தது. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டை நாடியது. தொடர்ந்து, படத்துக்கு தணிக்கை சான்று வழங்குமாறு தனி நீதிபதி உத்தரவிட்டு, மறு ஆய்வு பரிந்துரையையும் ரத்து செய்தார்.
பின்னர் இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில், தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ய, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டுக்கு படம் தயாரிப்பு நிறுவனம் போக, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தொடர்ந்து, இவ்வழக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களும் நடந்து முடிந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இந் நிலையில், ஜனநாயகம் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் ஜன.27ம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளிக்க உள்ளது. அன்றைய தினம் வெளியாகும் தீர்ப்பை அடிப்படையாக கொண்டு படம் எப்போது திரையரங்குகளில் ரிலீசாகும். எனவே, தீர்ப்பையும், படம் வெளியீட்டு தேதியையும் எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்துள்ளனர்.