குற்றாலத்தில் குரங்குகள் குறித்த ஆய்வு தொடங்கியது
1 min read
Research on monkeys begins in Courtallam
24.1.2026
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குரங்குகள் குறித்த ஆய்வு செய்யும் பணியை மாவட்ட வனத்துறை மற்றும் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாழும் குரங்குகளை அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்ய, தென்காசி வனத்துறை மற்று பராசக்தி கல்லூரி (விலங்கியல் துறை) இணைந்து சிறப்பு ஆய்வு திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த ஆய்வில் பராசக்தி கல்லூரியின் விலங்கியல் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் நேரடியாக களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குரங்குகளின் கூட்டங்கள் குடும்ப அமைப்பு, நடத்தை, உணவு பழக்கம், உயிரியல் தன்மைகள் மற்றும் உடல்நல நிலை ஆகியவை விரிவாக பதிவு செய்யப்பட உள்ளன. இந்த ஆய்வு குற்றாலம் பகுதிகளிலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு வெளியேயுள்ள அருகிலுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
குற்றாலம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களை வரவேற்கும் முக்கிய சுற்றுலா தலமாகும். சமீப காலங்களில் குரங்குகள் தொடர்பான மனித விலங்கு மோதல்கள். உணவு பறித்தல் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நுழைவு போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. இதனை நிரந்தரமாகவும் மனிதநேயமாகவும் தீர்க்க அறிவியல் ஆய்வு அவசியமாகும்.
இந்த ஆய்வின் மூலம் கிடைக்கும் தரவுகள், குரங்குகளின் எண்ணிக்கை, வாழிடம் பயன்பாடு, உடல்நலம் மற்றும் நடத்தை குறித்த துல்லியமான தகவல்களை வழங்கும். இத்தகவல்கள் அடிப்படையில், மக்கள் விழிப்புணர்வு, கழிவு மேலாண்மை, உணவு வழங்கல் கட்டுப்பாடு மற்றும் மோதல் குறைப்பு நடவடிக்கைகளை வனத்துறை சிறப்பாக திட்டமிட முடியும்.
மாணவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்பது, இளம் தலைமுறையினரிடையே வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் அறிவியல் அணுகுமுறையை வளர்க்கும் ஒரு முக்கிய முயற்சியாகும். குற்றாலத்தின் சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கவும். பொதுமக்கள் மற்றும் வனவிலங்குகள் இருவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யவும், இந்த ஆய்வு முக்கிய பங்களிக்கும் என மாவட்ட வன அலுவலர் முனைவர் ரா. ராஜ்மோகன். தெரிவித்துள்ளார்.