இந்தியா- அமெரிக்க ஒப்பந்தம் குறித்து விவாதிக்கக் கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி
1 min read
Opposition parties create ruckus in Rajya Sabha demanding discussion on India-US agreement
3/2/2026
இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று இரவு டெலிபோன் மூலம் பேசினார். பின்னர் இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
மத்திய அரசு சார்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளிவராத நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளிப்படையாக சமூக வலைத்தளத்தில் ஒப்பந்தம் குறித்து பதிவிட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில், இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பின்னர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
பூஜிய நேரம் முடிந்த பின்னர் காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், இதுகுறித்து கேள்வி எழுப்பினார். இந்தியா- அமெரிக்கா ஒப்பந்தம் குறித்த தகவல் வாஷிங்டனில் இருந்து பெறப்பட்டுள்ளது எனக் குற்றம்சாட்டினார்.
இதற்கு ஆளுங்கட்சியின் மாநிலங்களவை தலைவரான ஜே.பி. நட்டா, எதிர்க்கட்சிகளின் விரக்தி வெளிப்படுகிறது. நல்ல விசயங்களை கூட தவறானதாக பார்க்கப்படுகிறது எனக் குற்றம் சாட்டினார்.
மேலும், இந்தியா- அமெரிக்கா ஒப்பந்தம் தொடர்பாக விவாதம் நடத்த அரசு தயாராக இருக்கிறது என்பதை இந்த அவைக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். வர்த்தக ஒப்பந்தம் குறித்து அரசாங்கம் தானாக முன்வந்து ஒரு அறிக்கையை வெளியிடும் என்றார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாட்டின் நலன்கள் பேரம் பேசப்பட்டுள்ளன என குரல் எழுப்பினர். அதற்கு மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அரசு அறிக்கை தயார் செய்து கொண்டிருக்கும்போது, அதை கேட்க வேண்டும் என்றார். மேலும், விவாதத்திற்கு அரசு தயாராக இருக்கிறது. எனினும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுகின்றனர் என்றார்.
தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பின்னர் வெளிநடப்பு செய்தனர்.