தென்காசியில் நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை
1 min read
Birth control surgery for dogs in Tenkasi
20.2.2026
தென்காசி நகராட்சி ஆய்க்குடி ரோடு சமூக நாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு மையத்தில் அறுவை சிகிச்சைகள் துவக்கப்பட்டள்ளதாக நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலையும், போக்குவரத்திற்கு இடையூறையும் ஏற்படுத்தும் சமூக நாய்களை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கனவே பிறப்பு கட்டுப்பாடு 821 சமூக நாய்களுக்கு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தற்போது மீண்டும் பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும் வெறி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிர படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதன் பேரில், தென்காசி நகராட்சி ஆய்க்குடி ரோட்டில் அமைந்துள்ள சமூக நாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையத்தில் அரசு கால்நடை மருத்துவர்களைக் கொண்டு இப்பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
18-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமையில்,
தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் கோவில் ராஜா, நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் அறுவை சிகிச்சை பணிகள் துவங்கப்பட்டது.
அறுவை சிகிச்சைகளை அரசு கால்நடை மருத்துவர்கள் முகமது தவ்ஃபீக், அருண்பாண்டியன், மற்றும் சிவகுமார் ஆகியோர் அடங்கிய குழு மேற்கொண்டது.
இப்பணிகளுக்கான ஏற்பாடுகளை கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் த்ரிஷா மேரி, தென்காசி நகராட்சி சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன், விலங்கு நல அலுவலர் சிந்தியா,தூய்மை இந்தியா திட்ட பரப்பரையாளர் முத்துக்குமார் முதலானோர் அடங்கிய குழு மேற்கொண்டது.
பணிகளை திருநெல்வேலி மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் திருமதி விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து இப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றும், சமூக நாய்களுக்கு உணவு வழங்குபவர்கள் அதற்காக நகராட்சி மூலம் தனியான இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு அதற்கான பதாகைகள் நிறுவப்பட்டுள்ளது.
அந்த இடங்களில் மட்டும் நாய்களுக்கு உணவளிக்கவும், அந்த இடங்களை தூய்மையாக பராமரிக்கவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும்,
வீடுகளில் செல்லப் பிராணியாக நாய்களை வளர்ப்பவர்கள் அரசு வகுத்துள்ள சட்டங்களுக்கு உட்பட்டு அந்த நாய்களுக்கு உரிய தடுப்பூசி செலுத்தி, அடிப்படை வசதிகள் வழங்கி பராமரிக்கவும், சாலைகளில் அழைத்து வரும்போது முக கவசம் அணிந்து அழைத்து வரவும் வேண்டும்.
ஆடு,மாடு போன்ற கால்நடை வளர்ப்பவர்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் அவற்றை அடைத்து வைத்து பொது இடங்களில் அலைந்து திரிய விடாமல் பொது போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தவறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.