கடையம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை
1 min read
Request to establish a fire station in the Kadayam area
23.2.2026
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைத்து தர வேண்டுமென்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கை அரசால் ஏற்கப்படாமல் உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் கடையம் நகரம். இந்நகரத்தை சுற்றி சற்றேறக்குறைய நூறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. 23 ஊராட்சி மன்றங்களைக் கொண்டது கடையம் ஊராட்சி ஒன்றியமாகும். 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு வசிக்கும் மக்கள் தொகையின் எண்ணிக்கை 1,01324 ஆகும். தற்பொழுது இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்க கூடும்.
இந்த பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயமாகும். இம்மக்களின் விவசாயத்திற்கு ஜீவாதாரமாக இங்கு இராமநதி அணையும், கடனாநதி அணையும் அமைந்துள்ளது. வருடந்தோறும் நூற்றுக்கணக்கில் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும் நாணல்குளம் போன்ற பல பெரிய குளங்களும் அய்யம்பிள்ளை குளம் போன்ற பல சிறிய குளங்களும் இம்மக்களின் விவசாயத்திற்கு உப நீராதாரமாக விளங்கும் நீர்நிலைகளாகும்.
பெரியளவில் குற்ற சம்பவங்கள் இல்லாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் இல்லாமல் இங்குள்ள மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
மன அமைதிக்கு மக்கள் வழிபட சிறிதும் பெரிதுமாக எண்ணிலடங்கா திருத்தலங்கள் இப்பகுதிகளில் அமைந்துள்ளது. கோயில் திருவிழாக்களையும் கொண்டாடி தீர்க்கும் இம்மக்களின் மனதில் நீண்ட நாட்களாக ஒரு குறையும் இருந்து வருகிறது. இப்பகுதியில் தீயணைப்பு நிலையம் இல்லை என்பதுதான் அக்குறை.
பொதுவாக, ஒவ்வொரு 10 கிலோமீட்டருக்கும் இடைப்பட்ட பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்பட வேண்டுமென்ற நடைமுறை இருக்கையில் கடையத்திலிருந்து ஏறக்குறைய 25 கிலோமீட்டர் தொலைவில்தான் தீயணைப்பு நிலையங்கள் அமைந்துள்ளது. இங்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கும்பொழுது கடையத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தென்காசியிலிருந்தோ ஆலங்குளத்திலிருந்தோ அம்பாசமுத்திரத்திலிருந்தோதான் தீயணைப்பு வண்டியும் மீட்புப்பணி வீரர்களும் வரவேண்டிய சூழல் உள்ளது. இந்த மூன்று தீயணைப்பு நிலையங்களுள் அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலையம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்டதாகும். இதிலும் சில நேரங்களில் மாவட்ட எல்லை சிக்கல்கள் எழுவதுண்டு.
இங்குள்ள கிணறுகளிலோ குளங்களிலோ தவறுதலாக விழுந்து உயிருக்கு போராடும் கால்நடைகளையோ மனிதர்ளையோ காப்பாற்ற இப்பகுதி மக்களே போராடி மீட்க வேண்டிய நிலையுள்ளது. பலநேரங்களில் இம்முயற்சி தோல்வியில் முடிவடைகிறது.
சமீபகாலங்களில் இப்பகுதியில் நடைபெற்ற சில சம்பவங்களே இப்பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்பட வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது.
சம்பவம் 1:
சில மாதங்களுக்கு முன்பு மலைப்பகுதியில் பதுங்கியிருந்த ஒரு குற்றவாளியை பிடிக்க சென்று மலையிலிருந்து இறங்க முடியாமல் தத்தளித்த காவலர்களை மீட்க தீயணைப்பு மீட்புப்பணி வீரர்கள் வந்துதான் போராடி மீட்டு வந்தனர்.
சம்பவம் 2:
கடந்தாண்டு பெய்த மழையின்போது இராமநதி அணைக்கு வரும் நீர்வரத்து திடீரென அதிகரித்ததால் குளித்து கொண்டிருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடிய நிலையில் தீயணைப்பு மீட்புப்பணி வீரர்கள் வந்துதான் மீட்டனர்.
சம்பவம் 3:
கடந்த வாரம் மாடு மேய்க்க சென்றவர் குளத்தில் மூழ்கி இறந்தார். மாலை நேரத்தில் நீருக்குள் மூழ்கிய இவரை மீட்க மீட்புப்பணி வீரர்கள் வந்தபோது இரவாகிவிட்டதால் மீட்க முடியாமல் மறுநாள் காலையில்தான் இறந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. இதுபோல் எத்தனையோ எண்ணற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.
மேற்கூறிய சம்பவங்களிலெல்லாம் கடையம் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் இருந்திருக்குமேயானால் நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட்டு மக்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.
இப்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் என்பதால் கொடிய விஷத் தன்மை கொண்ட பாம்புகள், மலைப் பாம்புகள் மழைக்காலங்களில் மலையிலிருந்து இறங்கி ஊருக்குள் ஊடுருவி இப்பகுதி மக்களுக்கு அச்சத்தையும் ஆபத்தையும் உண்டாக்குகிறது. யானை, காட்டெருமை, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் மனிதர்களை தாக்குவதும் அவர்களின் உடமைகளை சூறையாடுவதும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
மேலும், இயற்கையாக மலையில் ஏற்படும் தீ விபத்துகளாலும் இப்பகுதி மக்கள் பல நேரங்களில் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.
செங்கல் சூளைகள் மற்றும் கனிமவள குவாரிகள் இப்பகுதிகளில் அதிகமென்பதால் இங்கு ஏற்படும் விபத்துகளால் பல தொழிலாளர்கள் உயிரிழப்பும் நிகழ்ந்து வருகிறது.
மேலும், இப்பகுதி விவசாயிகள் தங்களின் மாடுகளுக்காக நெல் அறுவடை சமயத்தில் கிடைக்கும் வைக்கோல்களை சேமித்து வைப்பது வழக்கம். இவ்வாறு சேமித்து வைக்கும் வைக்கோல் படப்புகள் கோடை காலத்தில் வெப்பத்தின் அதிக தாக்கத்தினாலும் மின்கம்பிகளின் உராய்வினாலும் பிற காரணங்களாலும் தீப்பற்றி எரிவது வழக்கம். இதுபோன்ற நேரங்களில் தென்காசியிலிருந்தோ ஆலங்குளத்திலிருந்தோ அம்பாசமுத்திரத்திலிருந்தோ தீயணைப்பு வண்டியும் வீரர்களும் கடையத்திற்கு வந்து சேரவே குறைந்தது அரை மணி நேரத்திலிருந்து முக்கால் மணி நேரமாவது ஆகும். சம்பவப் பகுதி குக்கிராமங்கள் அல்லது உள்பகுதிகளாக இருந்தால் குறுகிய சாலைகள் வழியே பயணிக்க வேண்டியுள்ளதால் அங்கு சென்றடைய நேரம் கூடுதலாக தாமதமாகும். இந்த இடைப்பட்ட நேரத்தில் வைக்கோல் படப்புகள் முற்றிலும் எரிந்து நாசமாகிவிடும். இதனால் வாயில்லா ஜீவன்களான மாடுகளுக்கு தீவனம் கிடைக்காமல் போகும் நிலையும் ஏற்படுகிறது.
முக்கியமாக, கடையத்தை சுற்றிலும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 50க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன.
மலைமேல் அமைந்துள்ள தோரணமலை முருகன் திருக்கோயில் அத்திரிமலை கோரக்கநாதர் திருக்கோயில் போன்ற கோயில்களுக்கு வரும் பக்தர்கள் பலருக்கு ஆக்சிஜன் குறைபாடுகள் ஏற்படும்பொழுது பக்தர்களை விரைந்து மீட்டு மலையின் அடிவாரத்திற்கு கொண்டுவந்து சிகிச்சை மேற்கொள்ள மீட்புப்பணி வீரர்களின் உதவி அவசியமாகும்.
மேலும், இங்கெல்லாம் சட்டம் ஒழுங்கு தவிர்த்துள்ள பாதுகாப்பு காரணங்களுக்கு தீயணைப்பு நிலையம் கடையம் பகுதியில் விரைந்து அமைப்பது மிகமிக அவசியம் மட்டுமல்ல கட்டாயமுமாகும்.
ஏனென்றால், கடையம் சுற்றுவட்டாரத்தில் கடையம் மற்றும் ஆழ்வார்குறிச்சியில் மட்டுமே காவல் நிலையங்கள் உள்ளது. இங்கு பணிபுரியும் சொற்ப எண்ணிக்கையிலான காவலர்களைக் கொண்டு இவ்வளவு எண்ணிக்கையிலான மக்களின் சகலவித பாதுகாப்புகளையும் உறுதி செய்வதென்பது இயலாத காரியமாகும். முக்கியமாக வருடந்தோறும் தை மாதத்தில் மட்டும் பல நூற்றுக்கணக்கான கோயில்களில் திருவிழாக்கள் நடக்கும்போது பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது கடினமான காரியம்.
எனவே, மக்களின் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயல்படும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்களின் சேவை கடையம் பகுதி மக்களுக்கு மிகமிக தேவையான ஒன்றாகும்.
எனவே, கடையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் இந்த இன்னல்களையெல்லாம் தீர்க்கும் பொருட்டும் அவர்களின் உயிரையும் உடமைகளையும் காக்கும் பொருட்டும் கடையம் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைப்பது மிகமிக அவசியமானதாகும்.
அரசின் கருணைப் பார்வை கடையம் மக்களின் மீது கடாட்சிக்குமா?
காத்திருக்கின்றனர் மக்கள் கவலையுடன்.