‘சட்டமன்ற தேர்தலில் எங்கள் பங்களிப்பு உண்டு’ – சசிகலா பேட்டி
1 min read
சசிகலா
‘We have a role to play in the assembly elections’ – Sasikala interview
26.2.2026
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களத்தில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. இணைந்தது.
அதேவேளை, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு என்ற முழக்கத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கியபோது அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை டி.டி.வி.தினகரன், சசிகலா எடுத்தனர். ஆனால், சசிகலா முடிவுக்கு எதிராக டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார்.
அதேவேளை, சசிகலா என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதில் பரபரப்பு நிலவி வந்தது. மேலும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான கடந்த 24-ந்தேதியன்று, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் பங்கேற்ற சசிகலா, புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார்.
மேலும் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்திலான கொடியில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெற்ற கட்சிக்கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். கடந்த 9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததுபோல் இனி என்னால் இருக்க முடியாது என்று கூறிய அவர், கட்சியின் பெயர் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்று கூறினார்.
இந்த நிலையில், சென்னையில் இன்று சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் எங்கள் பங்கு நிச்சயமாக இருக்கும். கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசி வருகிறோம். நல்லபடியாக நடக்கும். தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே இருந்தாலும், தமிழக மக்களுக்கு என்னை தெரியும் என்பதால் எந்த பிரச்சினையும் இருக்காது” என்று தெரிவித்தார்.