ராமேசுவரத்தில் இருந்து கச்சத்தீவு திருவிழாவுக்கு 4 ஆயிரம் பேர் சென்றனர்
1 min read
4,000 people went from Rameswaram to the Katchatheevu festival
27.2.2026
கச்சத்தீவு பக்தர்களின் பயணத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர நாராயணன், ராமேசுவரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.ஒவ்வொரு படகுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் ஏற்றப்பட்டனர். படகுகளில் ஏறிய அவர்கள் உற்சாகத்துடன் கச்சத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர். இன்று பிற்பகலுக்குள் அனைத்து படகுகளும் கச்சத்தீவுக்கு சென்றடையும். கச்சத்தீவு திருவிழாவையொட்டி இந்திய கடல் எல்லையில் கடற்படை, கடலோர காவல் படையினர், உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதே போல் கச்சத்தீவு மற்றும் இலங்கை கடல் எல்லையிலும் அந்நாட்டு கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.அதேபோல் கச்சத்தீவு கடற்கரையில் இலங்கை ராணுவம் மற்றும் போலீசாரின் சோதனைக்கு பின்னர் இருநாட்டு பக்தர்களும் திருவிழா நடைபெறும் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். அங்கு பக்தர்கள் அமருவதற்கும், ஓய்வெடுக்கவும் பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
அப்போது அந்தோணியார் உருவம் பதித்த கொடியை நெடுந்தீவு பங்குசந்தை பத்திநாதன், ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ ஆகியோர் ஏற்றி வைக்கிறார்கள். தொடர்ந்து சிலுவைப் பாதை திருப்பலி நடைபெறுகிறது. இரவு அந்தோணியார் சொரூபத்துடன் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தேர்ப வனி நடக்கிறது. 2-ம் நாளான நாளை (சனிக்கிழமை) சிறப்பு திருப்பலி நடக்கிறது. அதனை தொடர்ந்து கொடியிறக்கம் நடக்கிறது.
விழா முடிந்த பின் இந்திய பக்தர்கள் நாடு திரும்புகிறார்கள். கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் கடல் பகுதியில் 5 நாட்களுக்கு மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.கச்சத்தீவு திருவிழாவையொட்டி, உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்களும், டார்னியர் விமானமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.