முதலியார்பட்டி ரயில்வே கேட் சீரமைப்பு பணிகள் தாமதம்-போராட்டம்
1 min read
Mudaliarpatti railway gate renovation works delayed- Public suffering
1.3.2026
தென்காசி மாவட்டம்,கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி ரயில்வே கேட் சீரமைப்பு பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வருவதால் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ரயில்வே நிர்வாகம் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதே பகுதியை சேர்ந்த சமூகநல ஆர்வலர் நூருல் அமீர் ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள முதலியார்பட்டி ரயில்வே கேட்டில் கடந்த 15 நாட்களாக பராமரிப்பு வேலைகள் நடந்து வருவதால் தண்டவாளப் பகுதி சாலை மட்டத்திலிருந்து சுமார் ஒரு அடி பள்ளமாக இருப்பதால் இந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு கடந்து செல்கின்றனர். இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் குழந்தைகள் மிகவும் ஆபத்தான சூழலில் பயணிக்கின்றனர். முக்கியமாக ரயில்கள் சென்றபின் கேட் திறக்கும் வேளையில் மின்னல் வேகத்தில் எதிரெதிர் திசைகளிலிருந்து ஒட்டுமொத்த வாகனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் முந்தி செல்ல முயலும்போது இருசக்கர வாகனத்தில் அமர்ந்துள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த ஆபத்தான நிலை இரண்டு வாரங்களாக தொடர்கிறது.
இப்பிரச்சினையை ரயில்வே அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற இந்த பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி இப்பகுதியை சேர்ந்த சமூகநல ஆர்வலர் நூருல் அமீர் அதிகாரிகளிடமிருந்து தகுந்த பதில் கிடைக்காததாலும் பணிகள் மிகவும் மந்தமாக நடப்பதாலும் கொதிப்படைந்த சமூகநல ஆர்வலர் நூருல் அமீர் 27.02.2026 அன்று காலை 10.30 மணிக்கு தண்டவாளத்தின் குறுக்கே படுத்து போராட்டம் நடத்தினார். இந்த நேரம் தொடர்வண்டிகள் வரும் நேரமாததால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பொதுமக்கள் சமாதானம் செய்தும் நூருல் அமீர் மறியலை கைவிடாததால் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையம் காவல்நிலைய காவலர்கள் சமயோசிதமாக செயல்பட்டு மறியல் செய்த சமூகநல ஆர்வலர் நூருல் அமீரை சமாதானம் செய்து தண்டவாளத்திலிருந்து வெளியில் கொண்டு வந்தனர். இதனால் சிறுது நேரம் இந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
மறியலில் ஈடுபட்ட சமூகநல ஆர்வலர் நூருல் அமீர் கடையம் வட்டார பகுதிகளில் பொதுமக்கள் சார்ந்த பல பொது பிரச்சினைகளில் தனியாளாக முன்னின்று போராடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-ஜோசப், நிருபர்