ஆழ்வார்குறிச்சி நல்லாசிரியர் மாடசாமிக்கு இயற்கை பாதுகாப்பு முன்னோடி விருது
1 min read
Nature Conservation Pioneer Award for Alwar Kurichi’s Nallasiri Madasamy
5/3/2026
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த நல்லாசிரியர் மாடசாமிக்கு தமிழ்நாடு வனத்துறை சார்பில் 2025க்கான இயற்கை பாதுகாப்பு முன்னோடி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு வனத்துறை மாநிலம் முழுவதும் இயற்கை, வன உயிரின பாதுகாப்பில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தன்னார்வலர்களை கௌரவிக்கும் விதமாக இயற்கை பாதுகாப்பு முன்னோடி எனும் பெயரில் விருதும் ஊக்கத் தொகையும் வழங்கி கௌரவித்து வருகிறது.
மாணவர்களையும் பொதுமக்களையும் ஊக்கப்படுத்தி இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மரக்கன்று நட்டு பராமரித்தல், குளக்கரை மற்றும் தரிசு இடங்களில் பனை விதைகள் நடவு செய்தல், கோவில்களை சுற்றியுள்ள இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், ஆண்டு தோறும் இயற்கை சார்ந்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குதல், நீர் நிலைகளைப் பராமரித்தல் உள்ளிட்ட இயற்கையை பாதுகாக்கும் சேவைப் பணிகளை தொடர்ந்து செய்து வரும் நல்லாசிரியர் மாடசாமியை பாராட்டி தமிழ்நாடு அரசு வனத்துறை 2025ஆம் ஆண்டிற்கான இயற்கை பாதுகாப்பு முன்னோடி விருதும் ஊக்கத் தொகையையும் வழங்கி கௌரவித்துள்ளது.
உலக வன உயிரின தினத்தன்று நடந்த விருது வழங்கும் விழாவில் நல்லாசிரியர் மாடசாமிக்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இயற்கை பாதுகாப்பு முன்னோடி விருது மற்றும் ரூ. 25000க்கான காசோலை வழங்கி சிறப்பித்தார். விழாவிற்கு தென்காசி மாவட்ட வனச்சரக அலுவலர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். மாவட்ட உதவி வன பாதுகாவலர் நெல்லை நாயகம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குற்றாலம் வனச்சரக அலுவலர் செல்லத்துரை, மாவட்ட பசுமை வளர்ச்சி அலுவலர் பெரோலின் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விருது பெற்ற நல்லாசிரியர் மாடசாமியை சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள், சமூகநல ஆர்வலர்கள், இலக்கிய அமைப்பினர் மற்றும் நண்பர்கள் பாராட்டினர்.
கடந்த ஆண்டில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இவரது பசுமை செயல்பாடுகளை பாராட்டி 2024ஆம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் எனும் விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.