மந்தியூர் சாலையில் ஓடும் கழிவுநீர் சாலை
1 min read
Sewage road running on Mandiyur road
12.3.2026
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம் மந்தியூர் சாலையில் மந்தியூர் ஊராட்சிக்குட்பட்ட அகம்பிள்ளை குளம் கிராமத்தில் வயல்களில் இருந்து வெளியேறும் நீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களிலிருந்து வெளியேறும் கழிவுநீருடன் கலந்து சாலையின் குறுக்கே ஆறாக ஓடுகிறது. இதனால் சாலையில் ஏற்பட்ட அரிப்பினால் சாலையின் நடுவே பெரும் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் பெரும் இடையூறாகவும் ஆபத்தாகவும் இருக்கிறது.
இந்த சாலையின் வழியேதான் சம்பன்குளம், கோவிந்தபேரி, இராஜாங்கபுரம், மந்தியூர் மற்றும் அகம்பிள்ளைக்குளம் ஆகிய கிராமங்களிலிருந்து மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியர், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், கூலிப் பணிக்கு செல்பவர்கள் மற்றும் பல்வேறு முக்கிய பணிகளுக்காக கடையத்திற்கு வரும் பொதுமக்கள் இச்சாலை வழியேதான் சைக்கிள் மற்றும் இருசக்கர மோட்டார், ஆட்டோ, அரசு பேருந்து மற்றும் தனியார் சிற்றுந்து போன்ற வாகனங்களில் அதிகமாக பயணிக்கின்றனர். ஒருநாளில் மட்டும் குறைந்தபட்சம் ஆயிரம் வாகனங்கள் இச்சாலை வழியே செல்கின்றன.
மேலும், இந்த கிராமங்களிலுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தேவையான இடுபொருட்கள் வெளியூர்களிலிருந்து கொண்டு வரவும், இங்கு விளையும் நெல், காய்கனிகள், மாங்காய், சிறுகிழங்கு போன்ற உணவுப் பொருட்களை பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, திருநெல்வேலி போன்ற பெரிய காய்கறி சந்தைகளுக்கும் கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கும் விவசாயிகள் கொண்டு செல்ல இந்த சாலையே முக்கிய சாலையாக உள்ளது. இதே சாலை வழியாகத்தான். இப்பகுதிகளிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கும் உணவுப் பொருட்களை பெரிய சரக்கு வாகனங்களில் கொண்டு வரவேண்டியுள்ளது.
கோவிந்தபேரி கிராமத்தில் அமைந்துள்ள ஜோஹோ பன்னாட்டு நிறுவனத்திற்கு ஆளுநர் உள்ளிட்ட மத்திய மாநில அமைச்சர்களும் வந்து சொல்லும் சாலையாகவும் இச்சாலை இருக்கிறது.
இச்சாலை வழியேதான் சம்பந்தப்பட்ட மந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரசு அதிகாரிகளும் பயணிக்கின்றனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லாமலேயே இப்பகுதி சாலை குண்டும் குழியுமாகவே பல வருடங்களாக உள்ளது.
ஜனநாயகத் திருவிழாவான சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் வரவுள்ள நிலையில் ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரும் அரசு அதிகாரிகளும் முயற்சிப்பார்களா?
வர இருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் இந்த சாலையில்தான் வருவார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, உடனடியாக சாலையின் குறுக்கே ஓடும் வெள்ளத்தை மாற்று வழியிலோ அல்லது குழாய் அமைத்தோ கொண்டு சென்று இச்சாலையை சீரமைத்து மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு ஆவண செய்ய வேண்டுமென இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் சமூகநல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்களின் கண்களில் கருணை கிடைக்குமா?
–ஜோசப், நிருபர்.