தென்காசி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விவரம்
1 min read
Details of the election code of conduct in Tenkasi district
17.3.2026
தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தென்காசி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் 15.03.2026 முதல் அமல்படுத்தப் பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக பொதுமக்கள் எவரும் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000/- க்கு மேல் ரொக்கம் மற்றும் ரூ.10,000/- க்கு மேல் உள்ள பரிசுப்பொருட்கள் ஆகிய எவற்றையும் எடுத்துச் செல்ல அனுமதியில்லை.
மேற்படி ரொக்கம் மற்றும் பரிசுப்பொருட்கள் எடுத்துச்செல்வதை கண்காணிக்க தென்காசி மாவட்டத்தில் 15.03.2026 முதல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு ஆகியவை ஏற்படுத்தப்பட்டு சுழற்சி முறையில் அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நேர்வில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000/- க்கு மேல் ரொக்கம் அல்லது ரூ.10,000/- -க்கு மேல் உள்ள பரிசுப்பொருட்கள் எடுத்துச்சென்று மேற்படி பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர்களால் பறிமுதல் செய்யப்படும் நேர்வுகளில், மேற்படி பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் அல்லது பரிசுப்பொருட்களை விடுவித்திட தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, (1800 425 8375) தலைமையில் மாவட்ட குறைதீர்க்கும் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி குழுவில் நேரில் ஆஜராகி ரொக்கம் அல்லது பொருட்கள் எந்த நோக்கத்திற்காக கொண்டு செல்லப்பட்டது என்பதற்கான உரிய அசல் ஆவணங்களுடன் மனு அளிக்கும் பட்சத்தில் மாவட்ட குறைதீர்க்கும் குழு தங்களது கோரிக்கை மற்றும் சமர்ப்பித்த ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து தங்கள் கோரிக்கை உண்மைத்தன்மை உடையது என தீர்மானிக்கும் பட்சத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்களது பொருட்கள் அல்லது பணம் விடுவிக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தெரிவித்துள்ளார்.