இந்தூரில் மின்சார வாகனம் சார்ஜர் வெடித்து 8 பேர் பலி
1 min read
8 killed in electric vehicle charger explosion in Indore
18.3.2026
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரிலுள்ள பிரஜேஷ்வரி அனெக்ஸ் காலனியில் அமைந்துள்ள மூன்று அடுக்கு மாடி குடியிருப்பின் வெளியே, மின்சார கார் சார்ஜ் செய்யப்பட்டு கொண்டிருந்தபோது அங்குள்ள சார்ஜிங் பாயிண்டில் திடீரென வெடிப்பு ஏற்பட்டு தீ பிடித்தது. இந்த தீ விபத்து பற்றிய தகவல் அறிந்த உடனே உதவி காவல் ஆணையர் குந்தன் மண்டலோய் தலைமையிலான குழுவினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர்.
அதிகாலை 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காரில் பற்றிய தீ பின்னர் வீட்டின் உள்ளேயும் பரவியது. வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களும் வெடித்ததால் தீ வேகமாக பரவியது. மேலும் இந்த விபத்து அதிகாலை நடந்ததால் மக்கள் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்டதாலும், தப்பிக்க முடியாமல் எட்டு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விபத்தில் மூவர் மீட்கப்பட்டனர், ஒரு குழந்தையை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறதாக உதவி காவல் ஆணையர் குந்தன் கூறினார்.
தீ விபத்தின் போது மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. உயிரிழந்த எட்டு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த கோர விபத்து அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது