August 12, 2026

Seithi Saral

Tamil News Channel

நாடு முழுவதும் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை 67 சதவீதம் அதிகரிப்பு

1 min read

Number of unemployed graduates increases by 67 percent across the country

18.3.2026
நாடு முழுவதும் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பெங்களூரில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் பட்டதாரிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப வேலை வாய்ப்புகள் உயரவில்லை. இதன் விளைவாக, வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து, வருமான வளர்ச்சியும் மந்தமடைந்துள்ளது.

இந்தியா தனது இளைஞர்களுக்கு உயர் கல்விக்கான அணுகலை எளிமையாக்கி விரிவுபடுத்துவதில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது. அதேவேளையில், கடந்த 20 ஆண்டுகளில் வேலையில்லாத இளைஞர்களான (20-29 வயது) பட்டதாரிகளின் பங்கு 2 மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

2004-ல் 32 சதவீதமாக (30 லட்சம்) இருந்த வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை, 2023-ல் சுமார் 1.10 கோடியாக (67 சதவீதம்) உயர்ந்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், பட்டதாரி இளைஞர்களின் பங்கு 2004-ல் 10 சதவீதமாக (1.90 கோடி) இருந்ததில் இருந்து, 2023-ல் 28 சதவீதமாக (6.3 கோடி) உயர்ந்துள்ளது. 2004 மற்றும் 2023-ம் ஆண்டுக்கு இடையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 லட்சம் பட்டதாரிகள் உருவானார்கள்.
அதே சமயம் வேலை வாய்ப்பு பெற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 28 லட்சம் மட்டுமே அதிகரித்தது. அவர்களில் 17 லட்சம் பேர் மட்டுமே சம்பளம் பெறுபவர்களாக இருந்தனர். எனவே, பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு, அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரிக்கவில்லை. பெருகிவரும் பட்டதாரிகளுக்கு அரசு போதுமான வேலைகளை உருவாக்கத் தவறியதன் விளைவாக, அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகளும் மிகக் குறைவான வேலைகளும் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சமீப காலமாக இளைஞர்களிடையே வேலை தேடுவதற்கு முன் காத்திருக்கும் மனப்பான்மை அதிகரித்து வருகிறது. படித்த படிப்புக்கு ஏற்ற நல்ல வேலை கிடைத்தால் வருமானம் சிறப்பாக இருக்கும் என்று பலர் காத்திருக்கின்றனர். இந்த நிகழ்வு ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்களையும் உள்ளடக்கி உள்ளது.

அதே நேரத்தில், பட்டதாரிகளின் வருமானத்தில் பாலின இடைவெளிகள் கணிசமாகக் குறைந்துள்ளன. இது இளம் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் மேம்பட்டுள்ளதைக் குறிக்கிறது.
முந்தைய தலைமுறையினரை விட இளம்பட்டதாரிகள் விவசாயத் துறையிலிருந்து வேகமாக வெளியேறி, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில், குறிப்பாகப் பெண்கள், அதிகளவில் நுழைகின்றனர். தகவல் தொழில்நுட்பம், வாகன உற்பத்தி மற்றும் வணிக ஆதரவு சேவைகள் ஆகியவை முக்கியத் துறைகளாகும். மேலும், சாதி மற்றும் பாலின அடிப்படையிலான தொழில் பாகுபாடு தற்போது குறைந்துள்ளது.

கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில், இந்தியாவின் வேலைவாய்ப்பு பெற்ற மக்கள் தொகை 49 கோடியில் இருந்து 57.2 கோடியாக அதிகரித்துள்ளது. 2021-22 மற்றும் 2023-24-க்கு இடையில், ஆண்களுக்கான வேலைவாய்ப்பு விகிதம் 71 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாகவும், பெண்களுக்கானது 26 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. ஆனால், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பில் பெரும்பகுதி விவசாயத் துறையிலேயே அமைந்துள்ளது. 2021-22 மற்றும் 2023-24-க்கு இடையில் சேர்க்கப்பட்ட 8.3 கோடி வேலைகளில், 4 கோடி விவசாயத் துறையில் உருவாக்கப்பட்டுள்ளன. சில குறிப்பிடத்தக்க வெற்றிகள் இருந்த போதிலும், கடந்த ஐந்தாண்டுகளில் போதுமான எண்ணிக்கையில் சம்பள அடிப்படையிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.

நாடு முழுவதும் சீரற்ற பொருளாதார வளர்ச்சி நிலவுவதால், இளைஞர்கள் வேலைவாய்ப்பை தேடி வெளிநாடுகளுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடம்பெயரும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *