June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டுக்கு 5 தொகுதிகள்

1 min read

5 seats for Communist of India in DMK alliance

19.5.2026
தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், கடந்த தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட, அதிகமான இடங்களை கேட்டு பெற திட்டமிட்டிருந்தன.
ஆனால், தே.மு.தி.க., உள்ளிட்ட புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்ததால், கம்யூனிஸ்ட் கட்சிகள் கேட்ட தொகுதிகளை தி.மு.க.,வால் ஒதுக்க முடி யவில்லை. நீண்ட இழு பறிக்கு பின், கடந்த தேர்தலில் பெற்ற ஆறில் ஒன்றை குறைத்து, ஐந்து தொகுதிகள் வரை ஒதுக்குவதாக தி.மு.க., தெரிவித்திருந்தது.

‘அதுவும் அக்கட்சிக்கு இருக்கும் பலத்தின் அடிப்படையில் அல்ல; கூட்டணியில் காட்டப்படும் விசுவாசத்திற்காகவே’ என, தி.மு.க., தரப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் காரணம் சொல்லப்பட்டு உள்ளது.

இதையடுத்து, சென்னை தி.நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம், மாநில செயலர் வீரபாண்டியன் தலைமையில் நடந்தது. அதில், தி.மு.க., ஒதுக்க விரும்பும் ஐந்து தொகுதிகளை ஏற்றுக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நேற்று, சென்னை அறிவாலயத்தில் நான்காம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சு நடந்தது. அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு என்ற ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலினும், வீரபாண்டியனும் கையெழுத்திட்டனர்.

வீரபாண்டியன் அளித்த பேட்டியில், ”குறைந்த தொகுதிகளில் போட்டியிடுவது, எங்களை சோர்வடையச் செய்யாது. அதற்கு மேல் எங்களுக்கான அரசியல் ஒன்று உள்ளது; அது, பா.ஜ.,வை வீழ்த்துவது. பேச்சு நடத்தியபோது, தி.மு.க., தரப்பில் எந்த அழுத்தமும் தரவில்லை,” என்றார்.

தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தலில் போட்டியிடும் தொகுதி களின் எண்ணிக்கை, தேர்தலுக்கு தேர்தல் இறங்கி வருகிறது.

கடந்த 1989 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் 13 தொகுதிகளிலும்; 1991 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் 10 தொகுதிகளிலும் இக்கட்சி போட்டியிட்டது.
பின், 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் 13 தொகுதிகளிலும்; 2001 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் எட்டு தொகுதிகளிலும் போட்டியிட்டது.
அதை தொடர்ந்து, 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் 10 தொகுதிகளிலும்; 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் 10 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது.

கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், மக்கள் நல கூட்டணியில் அதிகபட்சமாக 25 தொகுதிகளில் இக்கட்சி களமிறங்கியது. அதன்பின், 2021ல் தி.மு.க., கூட்டணியில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டில் மட்டுமே வென்றது.

வரும் சட்டசபை தேர்தலில் ஐந்து தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. அதுவும், அக்கட்சிக்கு இருக்கும் ஆதரவு பலத்தின் அடிப்படையில் அல்ல; தி.மு.க., மீதும், கூட்டணி மீதும் அக்கட்சிக்கு இருக்கும் விசுவாசத்தின் அடிப்படையிலானது என, தி.மு.க., தரப்பில் காரணம் சொல்லப்பட்டு உள்ளது.

கையெழுத்து

இதே விசுவாசத்தோடு தி.மு.க., கூட்டணியில் தொடரும் வி.சி.,க்கு தொகுதிகள் ஒதுக்குவதில், இன்னும் இழுபறி காணப்படுகிறது. கடந்த முறை, இக்கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன; நான்கில் வெற்றி பெற்றது.

கட்சி வளர்ச்சியை காரணம் காட்டி, இம்முறை எட்டு தொகுதிகள் கேட்டு, முட்டி மோதுகிறது; அதில் ஒன்றை குறைத்து கொடுத்தால் கூட, உடனே ஒப்பந்தத்தில் கையெழுத்திட காத்திருக்கிறது.

கூட்டணி விரிவாக்கத்தை காரணமாக சொல்லி, தி.மு.க., தலைமையோ, கடந்த முறை கொடுத்த ஆறில் ஒன்றை குறைத்து, ஐந்து தொகுதிகள் வழங்க விரும்புவதாக கூறுகிறது. என்ன நடக்கும் என்பது, இன்று அல்லது நாளை தெரியவரும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *