August 12, 2026

Seithi Saral

Tamil News Channel

பஸ்சில் நகை திருடிய பெண்களை விரட்டிச்சென்று பிடித்த மூதாட்டி

1 min read

Old woman chases away women who stole jewelry on bus and catches them

20.3.2026
கேரளம் மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் அடூர் அம்மாகண்டகரை பகுதியை சேர்ந்தவர் விஜயம்மா(வயது65). சம்பவத்தன்று இவர் தன்னுடைய அடகு வைத்த 5 பவுன் தங்க நகையை திருப்புவதற்காக காயங்குளத்திற்கு சென்றார்.

பின்பு அங்கிருந்து தனியார் பஸ்சில அடூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். திருப்பிய நகையை தனது கைப்பையில் வைத்திருந்தார். சென்னம்பள்ளி சந்திப்பு அருகே உள்ள பஸ் நிறுத்தம் வந்ததும் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது அவரது கைப்பை திறந்துகிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விஜயம்மா பைக்குள் பார்த்தபோது, அதில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகையை காணவில்லை. பஸ்சில் வரும்போது யாராவது திருடியிருக்க வேண்டும் என்று விஜயம்மா கருதினார். அப்போது அந்த வழியாக அவருக்கு தெரிந்த ஒரு நபர் இருசக்கர வாகனத்தில் வந்தார்.
அவரிடம் நடந்த சம்பவத்தை கூறி, அவருடைய இருசக்கர வாகனத்தில் ஏறி தான் வந்த பஸ்சை பின்தொடர்ந்து சென்றார். பஸ்சின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றனர்.
பதினான்காவது மைல் சந்திப்பு அருகில் வந்தபோது, தன்னுடன் பஸ்சில் வந்த ஒரு பெண் நடந்துசென்றதை விஜயம்மா பார்த்தார். இதையடுத்து அந்த பெண்ணிடம் விசாரிக்க நிறுத்தினார். அப்போது அவருடன் நடந்துசென்ற 2 பெண்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை தொடர்ந்து தடுத்து நிறுத்தப்பட்ட பெண்ணும் தப்பி ஓடினார்.
இதனால் தனது நகையை அந்த பெண்கள் தான் திருடியிருக்கிறார்கள் என்பதை உறுதி செய்த விஜயம்மா, கூச்சலிட்டார். இதையடுத்து அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள், தப்பி ஓடிய 3 பெண்களையும் துரத்திச் சென்று பிடித்தனர். பின்பு அவர்கள் 3 பேரையும் போலீசில் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் தென்காசியை சேர்ந்த பிரியா(வயது35), முருகம்மா(38), காளி(42) என்பதும், பஸ்சில் சக பயணிகள் போன்று சென்று விஜயம்மாவிடம் நகை பறித்ததும் தெரியவந்தது.இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விஜயம்மாவின் நகை மீட்கப்பட்டது.

நகை திருட்டு போனதை கண்டறிந்ததும் விஜயம்மா சமயோகிதமாக விரைந்து செயல்பட்டது மட்டுமின்றி, சாலையில் தற்செயலாக வந்த தெரிந்த நபரின் இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றதாலும், பின்பு பொதுமக்கள் உதவியாலும் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் 3 பேரும் சிக்கிவிட்டனர்.

இல்லையென்றால் 3 பெண்களும் திருடிய நகையுடன் பிடிபடாமல் தப்பிச் சென்றிருப்பார்கள். நகை திருட்டில் ஈடுபட்ட பெண்களை பிடிக்க சினிமா பாணியில் நடந்த துரத்தல் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *