பாஜக மீது ஆதங்கம் – சரத்குமார் பேட்டி
1 min read
Fear of BJP – Sarathkumar Interview
22.3.2026
சரத்குமார் கடந்த 2024 மார்ச் மாதத்தில் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவுடன் தனது கட்சியை இணைத்துகொண்டு தொடர்ந்து பா.ஜனதாவுக்காக தேர்தல் பணி ஆற்றினார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ராதிகா சரத்குமார் களம் கண்டார். அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார்.
இதற்கிடையே, பா.ஜனதாவில் இணைந்து 2 ஆண்டுகள் ஆகியும் சரத்குமாருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எந்தவொரு பதவியும் பா.ஜனதாவில் வழங்கப்படவில்லை. இந்தநிலையில், சட்டசபை தேர்தலும் நெருங்கி விட்டதால் சரத்குமார் தனது ஆதரவாளர்கள் சிலருக்கு போட்டியிட பா.ஜனதா தலைமையிடம் வாய்ப்பு கேட்டிருந்தார்.
ஆனால் அதற்கு பா.ஜனதா தலைமையிடம் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பா.ஜனதா சரத்குமாரை புறக்கணிப்பதாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டனர். பா.ஜனதாவில் இருந்து விலகுங்கள் என்றும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னை தி.நகரில் ஆதரவாளர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சரத்குமார் ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
30 ஆண்டுகளாக என்னுடன் பயணித்தவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.பாஜகவில் எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படாதது ஏன்? என்ற அவர்களின் கேள்விக்கு நான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
பாஜகவில் எனக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படாதது ஆதங்கமாக உள்ளது. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என நினைக்கிறேன். பாஜகவிடம் மாநிலத்திலும் மத்தியிலும் அதிகாரத்தை கேட்போம். நான் யாருக்கும் பயந்தவன் இல்லை. சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது அரசியலுக்கு வந்தேன். நயினாரை சந்திக்க உள்ளேன். எங்களின் கோரிக்கையை அவர் நிறைவேற்றுவார் என நம்புகிறேன். இதுவரை பாஜகவில் எனக்கும் என் ஆதரவாளர்களுக்கும் பதவி வழங்கப்படவில்லை. பாஜக கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை.பாஜக கூட்ட மேடைகளில் உங்களின் புகைப்படம் கூட இல்லை? என ஆதரவாளர்கள் ஆதங்கப்படுகின்றனர் என்றார்.