பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோவில் திருவிழா
1 min read
Paramakudi Muthala Parameshwari Ambal Temple Festival
24.3.2026
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசியர்களுக்கு புராதன பாத்தியமான ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோவிலின் பங்குனித் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. இந்தாண்டு கோவிலின் பங்குனித் திருவிழா 23 ம்தேதி இரவு காப்பு கட்டுடனும், இன்று காலை கொடியேற்றத்துடனும் தொடங்கியது.விஷேச தீபாரதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் சிறப்பு விழாவாக 4 ம்நாளான 27 ம்தேதி மாலை வன்னியர்குல சேர்வைக்காரர்கள் மண்டகப் படியினர் சார்பில் வண்டி மாகாளி ஊர்வலம் நடந்து இரவு சின்னக்கடை மாரியம்மன் கோவில் முன்பு சூரசம்ஹார நிகழ்வு நடக்கிறது.தொடர்ந்து 9 ம்நாளான ஏப்ரல் 1 ம்தேதி இரவு 8.10 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ முத்தாலம்மன் கோவிலின் நான்கு வீதிகளிலும் வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.பின்பு ஏப்ரல் 2 ம்தேதி அதிகாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூபல்லக்கில் ஸ்ரீ முத்தாலம்மன் கள்ளர் திருக்கோலத்துடன் வைகையாற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஏப்ரல் 3 ம்தேதி பால்குட விழா நடக்கிறது. பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.தொடர்ந்து ஸ்ரீ முத்தாலம்மனுக்கு பால் அபிஷேகம் நடக்கிறது.மார்ச்.24 முதல் ஏப்ரல் 3 ம்தேதி வரை 11 நாட்கள் நடக்கும் விழாவில் காலை, இரவு நேரங்களில் ஸ்ரீ முத்தாலம்மன் பல்வேறு வாகனங்களில் நகரில் வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.தினமும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலின் பரம்பரை டிரஸ்டிகள் அம்பலம் பா.ஜெயராமன், வா.ரவீந்திரன், மானேஜிங் டிரஸ்டி சோ.பாலசுப்பிரமணியன் மற்றும் ஆயிர வைசிய சபை தலைவர் எஸ்.பாலுச்சாமி,இணை தலைவர் ராசி என்.போஸ் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர்.
-குணாளன், நிருபர்.