வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் சேலஞ்ச் ஓட்டு போடலாம்?
1 min read
Can I cast a challenge vote if my name is missing from the voter list?
27.3.2026
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால், ஆதார் / வாக்காளர் அட்டையைக் காட்டி, சட்டப்பிரிவு 49A-ன் கீழ் சேலஞ்ச் ஓட்டு பதியலாம். உங்கள் வாக்கை வேறொருவர் பதிந்திருந்தால் டெண்டர் ஓட்டு முறையில் வாக்குப் பதியலாம். ஒரு வாக்குச் சாவடியில் 14 சதவீதத்துக்கு மேல் டெண்டர் ஓட்டு பதிவாகி இருந்தால் அங்கு மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று சமூக வலைதளத்தில் செய்தி ஒன்று பரவி வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தேர்தல் விதிகளின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். தேர்தல் நடத்துதல் விதி-1961ன் 49A சட்டப்பிரிவு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றியே பேசுகிறது. சேலஞ்ச் ஓட்டு குறித்தல்ல.
நமது வாக்கை மற்றொருவர் செலுத்தினால் 49P சட்டப்பிரிவின்படி அதிகாரிகளிடம் புகாரளித்து, வாக்குச்சீட்டு முறையில் டெண்டர் வாக்களிக்கலாம். வேட்பாளர்களுக்கு இடையே வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்தால் மட்டுமே இந்த வாக்கு கணக்கில் கொள்ளப்படும். கள்ள ஓட்டு பதிவு உறுதியானால் மறு வாக்குப்பதிவு பற்றி தேர்தல் ஆணையமே முடிவு செய்யும். 14 சதவீதத்துக்கும் அதிகமாக டெண்டர் வாக்குகள் பதிவு செய்யப்பட்டால் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்பது பொய்யான தகவல். வதந்திகளை நம்பாதீர்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.