போர் தொடுத்தவர்களின் வேண்டுதல்களை இறைவன் கவனிக்க மாட்டார்-போப் லியோ பேச்சு
1 min read
God will not listen to the prayers of those who wage war – Pope Leo’s speech
30.3.2026
போப் லியோ குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு தன்னுடைய உரையின்போது, மேற்காசிய போர் நடந்து வரும் சூழலில், போரில் ஈடுபடுவது பற்றியும் அதன் பாதிப்புகள் பற்றியும் குறிப்பிட்டு பேசினார். போரில் ஈடுபடுபவர்களின் வேண்டுதல்களை இறைவன் நிராகரித்து விடுவார் என கூறினார். சிலுவையின் பாதையில் நடந்தவர் இயேசு கிறிஸ்து. அவருடைய காலடி சுவடுகளை நாம் பின்பற்றுகிறோம். மனித இனத்தின் மீது அவர் காட்டிய அன்பை ஆழ்ந்து சிந்திப்போம் என்றார்.
இயேசுவின் வாழ்வும், செயல்களும் வெளிப்படையாகவே போருக்கும், ஆக்கிரமிப்புக்கும் எதிராக இருந்ததுடன் அவர் பாதிக்கப்பட்டபோதும், மரணத்தின்போதும் கூட வன்முறைக்கு பதிலாக மனித தன்மை மற்றும் தியாகம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்த அமைதியின் அரசர் ஆவார்.
அதனால், போரை தொடுத்து அதில் ஈடுபடுபவர்களின் இறை வணக்கங்களை அவர் கவனிக்க மாட்டார். இதுபற்றி வேதத்தில், நீங்கள் பல முறை வேண்டுதல்களை வைத்தபோதும், நான் அதனை கவனிக்க மாட்டேன். உங்கள் கரங்கள் முழுவதும் ரத்தம் தோய்ந்துள்ளன என குறிப்பிடப்பட்டு உள்ளது என அதனை போப் சுட்டி காட்டினார்.
ஜெருசலேம் நகருக்குள் இயேசு நுழைந்தபோது குதிரையில் வரவில்லை. ஆனால், ஒரு கழுதையின் மீது வந்தவர் அவர். இதனால், மெசையாவின் வருகையால் மகிழ்ந்திருப்போம் என்ற பழமையான தீர்க்கதரிசனம் நிறைவேறியது என போப் கூறினார். வன்முறை மற்றும் மோதலால் உலகத்தில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் மீது கவனம் செலுத்தும்படி அப்போது அவர் சுட்டி காட்டினார்.