கொடைக்கானலில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து வாலிபர் பலி
1 min read
Youth dies after car falls into 300-foot gorge in Kodaikanal
30.3.2026
சென்னையை சேர்ந்தவர் முகமது கயாத் (வயது30). இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா வந்தார். ஏற்கனவே கொடைக்கானல் வந்த இவரது நண்பர்கள் மேல்மலையில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.
முகமது கயாத் மற்றும் அவரது நண்பர்கள் பூம்பாறை சாலையில் இன்று காலை சென்று கொண்டிருந்தபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பழனி வியூ பாய்ண்ட் பகுதியில் மலைச்சாலையில் திடீரென 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் காருக்குள் இருந்த நபர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து இடிபாடுகளில் சிக்கினர். உடனடியாக இது குறித்து அவ்வழியே சென்றவர்கள் கொடைக்கானல் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
ஆனால் இடிபாடுகளுக்குள் சிக்கி முகமது கயாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்ட போலீசார் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த வாலிபரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் விவரம் குறித்து அவரது நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானலுக்கு கோடைகாலம் தொடங்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை தற்போது அதிகரித்து வருகிறது. எனவே அவர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள போலீசார் உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை எடுத்து கூற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.