August 22, 2026

Seithi Saral

Tamil News Channel

கருணாநிதிக்கு வீட்டுச் சிறை குறித்து விசாரணை: எடப்பாடி பழனிச்சாமி உறுதி

1 min read

Investigation into Karunanidhi’s house arrest: Edappadi Palaniswami confirms

4.4.2026

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி ஆரணி தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மு.க.ஸ்டாலின் நெல்லையில் கோபத்தைக் கக்குகிறார், எரிச்சலை வெளிப்படுத்துகிறார். எனக்கு உயிர் கொடுத்து ஆளாக்கிய கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக இபிஎஸ் நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதாக ஸ்டாலின் சொல்கிறார்.
நான் பேசியதை நன்கு கேளுங்கள். உங்கள் கோபத்தை என்னிடம் காட்டாதீர்கள். உங்கள் துணை பொதுச்செயலாளர் ராஜாவிடம் காட்டுங்கள். அவர்தான் ஆடியோவில் ஒரு செய்தி சொன்னார். அது இந்தியா அளவில் வைரலாகிறது. அதைத்தான் நான் சொன்னேன். என் மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்..? ராஜா மீது கோபப்பட்டால் உண்மையைச் சொல்லிவிடுவார் என்பதால் பயம்.
ராஜா சொன்னதை தான் நான் சொன்னேன். அப்பாவை சிறையில் அடைப்பது நியாயமா..? உங்களை ஆளாக்கி இந்தியாவே உங்களை பாராட்டுகின்ற அளவுக்கு எம்.எல்.ஏ, அமைச்சர், துணை முதல்வர், செயல் தலைவர் ஆக்கினாரே, அதற்காக உங்கள் தந்தையை வீட்டுச் சிறையில் வைத்ததாக ராஜா சொல்கிறார்.
அழகிரியும் சொல்றார். ராஜா உண்மையைச் சொன்னால் இருக்கும் இடம் வேறாக மாறிவிடும். ஸ்டாலின் பேசப்பேச அது, உண்மையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. அண்ணனை ஒதுக்கிவிட்டீர்கள், தங்கையை மாநில அரசியலுக்கு வராமல் தடுத்துவிட்டீர்கள். கருணாநிதி கடைசி வரை உங்களுக்கு தலைவர் பதவி கொடுக்கவில்லை, அந்த அளவுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர் ஸ்டாலின்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ராஜா ஆடியோ செய்தியை விசாரணை மேற்கொண்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெயலலிதா இறந்தபோது என்னவெல்லாம் பேசினீர்கள்..? 2021 தேர்தலில் 22வது வாக்குறுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு, தவறு இழைத்தவர் எவராயினும் அவர் உரிய சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார் என்று அறிவித்திருந்தீர்கள்.
இப்போது நான் சொல்கிறேன், கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்தவர்கள் சட்ட ரீதியாக விசாரிக்கப்பட்டு, உண்மையிருந்தால் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும். அவரும் முன்னாள் முதல்வர்தானே. தந்தைக்கே இந்த கதி என்றால் நாட்டு மக்களுக்கு என்ன கதி என்று எண்ணிப்பாருங்கள்.
என் மீது ஸ்டாலின் ஒரு களங்கம் சுமத்தியிருக்கிறார். கருணாநிதி அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டார் என்னிடம். இதே கருணாநிதி முதல்வராக இருந்தபோது எம்ஜிஆர் மனைவி இறந்தார், நாங்க அதிமுக சார்பில் இடம் கேட்டோம், அவரும் முதல்வராக இருந்தவர், எம்ஜிஆர் பக்கத்தில் அடக்கம் செய்யக் கேட்டோம்.
முதல்வராக இருந்து இறந்தால்தான் இடம் கிடைக்கும், ராமாவரம் தோட்டத்தில் சொந்த இடம் இருக்கிறது, காவல்துறை மரியாதை செலுத்தப்படும் என்றீர்கள். அதற்கு முன்பு காமராஜர் முதல்வராக இருந்தவர். அவர் வேறு கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்தவர். கருணாநிதியிடம் அவரை புதைக்க மெரினாவில் இடம் கேட்டனர்.
முதல்வராக இருந்து இறந்தால்தான் மெரினாவில் இடம் கிடைக்கும், அதனால் கிண்டியில் இடம் கொடுக்கிறோம் என்றனர். அப்படி என்றால் கருணாநிதி யாரு..? முன்னாள் முதல்வர்தானே..? மற்ற முன்னாள் முதல்வர்களுக்கு ஒரு நியாயம், இவருக்கு ஒரு நியாயமா? அதனால்தான் கிண்டியில் 2 ஏக்கர் நிலம் கொடுத்தேன், அதை மறுத்து நீதிமன்றம் போனீர்கள். இந்த உண்மையை மறைக்க முடியாது. உங்கள் அப்பா என்ன முடிவு எடுத்தாரோ, அதே முடிவைத் தான் நானும் எடுத்தேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *