June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

சட்டசபை தேர்தல் வரலாறு(1952)

1 min read

History of Assembly Elections (1952)

(17-வது தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி (23.04.2026) தேர்தல் நடைபெற உள்ளது. 1952, 1957, 1962, 1967, 1971, 1977, 1980, 1984, 1989, 1991, 1996, 2001, 2006, 2011, 2016, 2021 என இதுவரை 16 பொதுத்தேர்தல்களை சந்தித்த சட்டமன்றத்தில் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களைப்பிடித்து ஆட்சி அமைத்தன என்ற வரலாறு இங்கு தொகுத்து வழங்கப்படுகிறது).

சுதந்திர இந்தியாவில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் முதல் பொதுத்தேர்தல், 1951-ல் தொடங்கி 1952 வரை வெவ்வேறு கட்டங்களாக நடந்தது. தமிழ்நாடு சட்டமன்றம் அப்போது மதராஸ் மாகாண சட்டமன்றமாக (மெட்ராஸ் ஸ்டேட் அசெம்பிளி) இருந்தது.
மதராஸ் சட்டமன்றத்தின் எல்லைகள் பரந்து விரிந்து இருந்தன. இன்றைய ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகள் மதராஸ் மாகாணத்திற்குள் அடங்கி இருந்தன.

இரட்டை உறுப்பினர் தொகுதிகள்

மதராஸ் மாகாண சட்டமன்றத்தின் மொத்த தொகுதிகள் 309; உறுப்பினர்கள் எண்ணிக்கை 375. அது எப்படி 309 தொகுதிகளுக்கு 375 உறுப்பினர்கள் என்று கேள்வி வரும்.

அப்போது பட்டியலின மக்களுக்கு தனித்தொகுதிகள் கிடையாது. அதற்குப்பதில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் இரட்டை உறுப்பினர் முறை அமலில் இருந்தது. அதாவது 66 தொகுதிகளில் இருந்து தலா இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். வாக்காளர்கள் இரு வாக்குகள் அளிக்கவேண்டும். ஒன்று பொது உறுப்பினருக்கு; இன்னொன்று பட்டியலின உறுப்பினருக்கு. இதற்கேற்ற வகையில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இவர்களில் அதிக வாக்குகள் பெற்ற இருவர் வீதம் தேர்ந்து எடுக்கப்பட்டனர். (66-ல் 62 பட்டியலினத்தவர்; 4 பழங்குடியினர்).

காங்கிரஸ்-கம்யூனிஸ்டு நேரடி போட்டி

1952-ல் செல்வாக்காக இருந்த கட்சிகள், காங்கிரசும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் தான். இவை போக, கிசான் மஸ்துார் பிரஜா கட்சி, கிரிஷிகர் லோக் பார்ட்டி, காமன்வீல் கட்சி, தொழிலாளர் கட்சி (டாய்லர்ஸ் பார்ட்டி), நீதிக்கட்சி ஆகியவையும் களம் கண்டன.
மொத்த இடங்கள் 375-ல் 372-க்கு மட்டும் தேர்தல் நடந்தது. மொத்த வாக்காளர்கள்: 3,66,00,615; வாக்களித்தவர்கள்:2,00,38,423. வாக்குப்பதிவு சதவீதம் 54.75. ஜனவரி 2-ந் தேதி தொடங்கி, 25-ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
தேர்தல் முடிவுகள் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மையை அளிக்கவில்லை. காங்கிரஸ் 152 இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சி என்ற அந்தஸ்தைப்பெற்றது. திராவிடர் கழகத்தின் ஆதரவைப்பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி 62 இடங்களில் வென்று இருந்தது.

முதல் தேர்தலில் திமுகவின் தாக்கம்

1949-ல் தொடங்கப்பட்ட திமுகழகம், 1952 தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், வன்னியர்கள் அதிகம் இடம் பெற்றிருந்த காமன்வீல் கட்சியையும், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியையும் ( டாய்லர்ஸ் பார்ட்டி) ஆதரித்தது. அதற்கு பிரதிபலனாக சட்டமன்றத்தில் தங்கள் கோரிக்கைக்கு (திராவிட நாடு) ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும் என்று உத்தரவாதம் பெற்றிருந்தது. அப்படி திமுகவின் ஆதரவைப்பெற்றிருந்த டாய்லர்ஸ் பார்ட்டி 34-ல் போட்டியிட்டு 19 இடங்களையும், காமன்வீல் கட்சி 13-ல் போட்டியிட்டு 6 இடங்களையும் வென்றிருந்தன.
எந்தக்கட்சியும் தனிப்பெரும்பான்மை பெற்றிராத நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இதர கட்சிகளின் ஆதரவைத்திரட்டி பெரும்பான்மை பலத்தைக்காட்டி, கூட்டணி ஆட்சி அமைக்க முன்வந்தது. ஆனால் அன்றைய மத்திய காங்கிரஸ் அரசும், இங்கிருந்த கவர்னரும் கம்யூனிஸ்டு தலைமையில் ஆட்சி அமைவதை விரும்பவில்லை.
மத்திய மந்திரியாக இருந்த ராஜாஜியை முதல்-மந்திரியாக்க டெல்லி மேலிடம் திட்டமிட்டது. அதற்கு ஏற்ற வகையில் காய்கள் நகர்த்தப்பட்டன. தேர்தலில் நின்று மக்கள் தீர்ப்பைப் பெற்றிராத ராஜாஜி மத்திய மந்திரி பதவியைத்துறந்து சென்னை வந்து, ‘டெல்லி ஆசி’யுடன் முதல்-மந்திரியாகப் பதவி ஏற்றார். (என்றாலும் தனக்கு பதவி ஏற்பதில் விருப்பம் இல்லை என்று அவர் கூறிக்கொண்டார்),

தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ‘தனிப்பெருங்கட்சி’ என்ற நிலையில், ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது. சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ராஜாஜி, இடைத்தேர்தலில் போட்டியிடுவதை விரும்பாமல், மேல்-சபை உறுப்பினர் (எம்எல்சி) ஆகிக்கொண்டார். அதோடு, பிற கட்சி எம்எல்ஏக்களை வளைத்து இழுத்து, காங்கிரசின் ஆதரவை 152-ல் இருந்து 167 ஆகப்பெருக்கிக்கொண்டார். அப்போது கட்சித்தாவல் தடைச்சட்டம் இல்லாதது அவருக்கு வசதியாகப்போய்விட்டது.

ராஜாஜியின் வீழ்ச்சி

1952 ஏப்ரலில் முதல்-மந்திரியாகப் பதவி ஏற்ற ராஜாஜியால் 1954 மார்ச் வரை மட்டுமே பதவியில் நீடிக்க முடிந்தது. அவர் கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தின் மூலம் அவருக்கு அவரே ஆப்பு வைத்துக்கொண்டார். அத்திட்டத்திற்கு எதிராக தமிழகமே கிளர்ந்து எழுந்ததால் அவர் பதவி விலக நேரிட்டது.
இதையடுத்து, புதிய முதல்-மந்திரி யார் என காங்கிரசில் கேள்வி எழுந்தது. அப்போது சி.சுப்பிரமணியத்தை கொண்டு வர முயன்றார், ராஜாஜி. ஆனால் பெருந்தலைவர் காமராஜர் சாதுர்யமாக செயல்பட்டு எம்எல்ஏக்களின் பெரும்பான்மை ஆதரவைப்பெற்று முதல்-மந்திரியாகப் பதவி ஏற்றார்.
பொதுவாக அப்போது காங்கிரசில் நிலவிய பிராமண ஆதிக்கத்தை காமராஜர் விரும்பவில்லை. எனவே, ராஜாஜியின் ஆதரவாளர் கையில் முதல்வர் பதவி செல்வதை அவர் தடுக்க எண்ணினார். அவரது இந்த எண்ணத்துக்கு ஈவெரா பெரியாரும் (திக), அறிஞர் அண்ணாவும்(திமுக) துணை நின்றனர்.

குடியாத்தத்தில் வென்ற காமராஜர்

முதல்-மந்திரியான காமராஜர் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லை. ஸ்ரீவில்லிபுத்துார் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அந்தப்பதவியை ராஜினாமா செய்து விட்டு, கம்யூனிஸ்டுகள் வலுவாக இருந்த குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு திமுகவும், திகவும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தன. “குணாளா வா குலக்கொழுந்தே வா” என அழைத்து, காமராஜரை குடியாத்தத்தில் போட்டியிட வைத்தார், அண்ணா. அந்தத் தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்று, ஏழை மாணவர்களுக்கும் கல்வி எளிதில் போய்ச் சேரும் வகையில் திட்டங்கள் தீட்டி, 1957 வரை நல்லாட்சி செய்தார்.
இதற்கு முன்னதாகவே, தமிழகத்தில் இருந்த ஆந்திரத்தின் பகுதிகள் பிரித்து எடுக்கப்பட்டு அம்மாநில மக்களின் கோரிக்கையை ஏற்று, 1953-ல் ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. கர்நாடகம், கேரளம் ஆகிய மொழி வழி மாநிலங்களும் 1956-ல் தோன்றின.
தமிழ்நாடு, சென்னை மாகாணமாகவே நீடித்தது. தமிழ்நாடு என்ற பெயர்க்கோரிக்கையை காங்கிரஸ் அரசு ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில் அடுத்த சட்டமன்றத்தேர்தல் 1957-ல் நடந்தது.
(1957 சட்டமன்றத்தேர்தல் நிலவரத்தை அடுத்து பார்ப்போம்).

(பாக்ஸ்)

1952 தேர்தல் கண்ணோட்டம்

மொத்த வாக்குகள் 3,66,00,615

பதிவானவை 2,00,38,423

சதவீதம் 54.75

மொத்த இடங்கள் 375

தேர்தல் நடந்தவை 372

(போட்டியின்றி தேர்வு 3)

காங்கிரஸ் 152

இந்திய கம்யூ 62

கிசான் மஸ்துார் பிரஜா கட்சி 35

தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19

கிரிஷிகார் லோக் கட்சி 15

பொதுவுடமை கட்சி 13

காமன்வீல் கட்சி 6

சென்னை மாநில முஸ்லிம் லீக் 5

பார்வர்டு பிளாக் (மார்க்சிஸ்ட்) 3

தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு 2

நீதிக்கட்சி 1

சுயேச்சைகள் 62.

————

(பாக்ஸ்)

மத்தியில் நேரு பிரதமர்

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.

அதன்படி முதல் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. நேரு பிரதமரானார்.

மதராஸ் மாகாணத்தில் மொத்தம் 75 நாடாளுமன்ற இடங்கள் இருந்தன. இதில் காங்கிரஸ் 35 இடங்களை வென்றது.

காங்கிரஸ் 35

இந்திய கம்யூ 8

பிரஜா சோசலிஸ்டு 2

கிசான் மஸ்தூர் 6

உழைப்பாளர் கட்சி 4

காமன்வீல் 3

பார்வர்டு பிளாக் 1

மு.லீக் 1

சுயே 15.

சுதந்திரத்திற்கு முன்பும் சிலகாலம் பின்பும் மாகாணங்களின் முதல்-அமைச்சர்களை பிரதமர்கள் என்றே அழைத்தனர். அந்த வகையில் சுதந்திரத்திற்குப்பிந்திய மதராஸ் மாகாணத்தின் முதல் பிரதமரும் ராஜாஜி தான்.

(கட்டுரைத் தொகுப்பு: மணிராஜ்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *