தமிழக சட்டசபை தேர்தல் வரலாறு (1957)
1 min read
காமராஜர் மீண்டும் முதல்- அமைச்சரானார்
History of Tamil Nadu Assembly Elections (1957)
8.4.2026
சுதந்திர இந்தியாவின் 2-வது தேர்தல் 1957-ம் ஆண்டு நடந்தது. 52-ல் மதராஸ் மாகாணத்துடன் இருந்த பல பகுதிகள் பிரிக்கப்பட்டு ஆந்திரா, கர்நாடகம்,
கேரளம் என மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டு விட்டன.
இதனால் 375 ஆக இருந்த மதராஸ் மாகாண சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 205 ஆக குறைந்து விட்டது. (அதாவது 167 தொகுதிகள்-205
உறுப்பினர்கள். 38 தொகுதிகள் இரட்டை உறுப்பினர் தொகுதிகளாக இருந்தன).
இந்தத் தேர்தலில் களம் கண்ட கட்சிகள்: காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக், சோசலிஸ்டு, பிரஜா சோசலிஸ்டு, சீர்திருத்த காங்கிரஸ், தி.மு.கழகம்.
சீர்திருத்த காங்கிரஸ் என்பது ராஜாஜி தொடங்கியது. அதாவது காங்கிரசின் போட்டிக்கட்சி. காங்கிரசை விட்டு வெளியேறிய அவர், தனது தலைமையிலான கட்சி தான் இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸ் என்று
கூறிக்கொண்டார்.
காமராஜர் தலைமையில் காங்கிரஸ் வலுவாக இருந்த நிலையில் தேர்தலை சந்தித்தது. அவருக்கு திராவிடர் கழகம் முழு ஆதரவு வழங்கியது. இது
காங்கிரசில் சிலருக்குப் பிடிக்கவில்லை என்றாலும், திகவின் ஆதரவை காமராஜர் ஏற்றுக்கொண்டார்.
தி.மு.கழகம் முதல் முறையாக இந்தத் தேர்தலில் தான் களம் கண்டது. ஆனால் அது அப்போது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே
அதன் வேட்பாளர்கள் சுயேச்சைகளாகத்தான் கருதப்பட்டார்கள்.
1957 மார்ச் மாதம் நடந்த இந்தத் தேர்தலின் போது மொத்த வாக்காளர்கள் 2,39,05,575 பேர். வாக்களித்தவர்கள் 1,11,30,996 பேர். வாக்குப்பதிவு சதவீதம் 46.56.
காங்கிரஸ் அமோக வெற்றி
தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு பெருவெற்றியைத் தேடித்தந்தன. பெரும்பான்மைக்கு 103 இடங்களே தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 151
இடங்களை வென்றது. அதற்கு அடுத்தபடியாக ராஜாஜியின் சீர்திருத்த காங்கிரஸ் 16 இடங்களை கைப்பற்றியது.
யாருமே எதிர்பாராத வகையில் தி.மு.கழகம் சார்பில்
சுயேச்சைகளாகப்போட்டியிட்ட 15 பேர் வெற்றி பெற்றனர். இதன் மூலம் சட்டமன்றத்தில் 3-வது இடத்தில் திமுக அமர்ந்தது. அங்கீகரிக்கப்பட்ட
கட்சிகளான கம்யூனிஸ்டு, பிரஜா சோசலிஸ்டு ஆகியவை ஒற்றை இலக்கத் தொகுதிகளை மட்டுமே வென்று காணாமல் போயின.
சாத்தூரில் காமராஜர் வெற்றி
1954 இடைத்தேர்தலில் குடியாத்தத்தில் போட்டியிட்டு வென்ற கமாராஜர்,
இம்முறை சாத்தூர் கொகுதியில் வெற்றி பெற்று 2வது முறையாக முதல்- அமைச்சர் பதவி ஏற்றார்.
அவரது அமைச்சரவையில், பக்தவச்சலம், சி. சுப்பிரமணியன், ஆர். வெங்கட்ராமன், மாணிக்கவேலு நாயக்கர், கக்கன், ராமையா, லூர்தம்மாள்
சைமன் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பு ஏற்றனர்.
ஏற்கனவே ஏழை மாணவர்களின் நலன் கருதி ஆட்சி செய்த காமராஜர் அதன் தொடர்ச்சியாக இம்முறையும் பள்ளிகள் பல உருவாக்கியும், மதிய உணவுத்திட்டத்தை செம்மையாக அமல் படுத்தியும் அடுத்த தேர்தல் வரை
நிலையான ஆட்சி தந்தார்.
(அடுத்து, 1962 தேர்தல் நிலவரத்தைப் பார்ப்போம்).
=====
முதல் தேர்தலிலேயே முத்திரை
பதித்த திமுகவின் வெற்றிக்கணக்கு

1949ல் கட்சி தொடங்கி 1952 தேர்தலில் போட்டியிடாத திமுகழகம் 1957 தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்டது. அதுவும் பேரறிஞர் அண்ணா,
திருச்சி திமுக மாநாட்டில் கட்சியினரிடம் வாக்கெடுப்பு நடத்திதேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்தார்.
அப்போது நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடந்தது.
திமுகழகம் சில நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 117 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. அப்போது புதிய கட்சி என்பதால் திமுக வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் கிடைக்கவில்லை. சுயேச்சை சின்னங்கள்
தான் ஒதுக்கப்பட்டன.
அண்ணா காஞ்சீபுரத்தில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். கலைஞர் கருணாநிதி குளித்தலையில் நின்றார். அவருக்கு சுயேச்சை சின்னமாக
உதயசூரியன் கிடைத்தது.
இந்த முதல் தேர்தலிலிலேயே திமுக முத்திரை பதித்து, சட்டமன்றத்தில் 15 இடங்களையும், நாடாளுமன்றத்தில் 2 இடங்களையும் வென்றது.
சட்டமன்றத்தில் வென்றவர்கள்:-
1) அண்ணா (காஞ்சீபுரம்)
2) கலைஞர் (குளித்தலை)
3) பேராசிரியர் அன்பழகன் (எழும்பூர்)
4) பக்கிரிசாமி பிள்ளை 5)சத்தியவாணிமுத்து (பெரம்பூர் இரட்டைத்தொகுதி)
6)ஏவிபி ஆசைத்தம்பி (ஆயிரம்விளக்கு)
7)ப.உ. சண்முகம் 8)சி.சந்தானம்(திருவண்ணாமலை இரட்டைத்தொகுதி)
9)இருசப்பன் 10)எம்பி சுப்பிரமணியன்(ஆத்தூர் இரட்டைத்தொகுதி)
11) எம்பி சாரதி (வேலூர்)
12) எஸ்எம் அண்ணாமலை (போளூர்)
13) நடராஜ உடையார் 14) எம்.ஆனந்தன் (கள்ளக்குறிச்சி இரட்டைத்தொகுதி)
15) எம். செல்வராஜ் (விருத்தாசலம்)
நாடாளுமன்றத்திற்கு வெற்றி பெற்றவர்கள்:-
1)ஈவெகி சம்பத் (நாமக்கல்)
2) தர்மலிங்கம் (திருவண்ணாமலை)
திமுக வேட்பாளர்களில் நாவலர் நெடுஞ்செழியன் சேலம்(1) தொகுதியில் வெறும் 207 வித்தியாசத்தில் தோற்று விட்டார்.
இதே போல் நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன் (தேனி), கவியரசர் கண்ணதாசன்
(திருக்கோஷ்டியூர்) ஆகியோரும் தோற்று விட்டனர்.
16 லட்சம் வாக்குகள் (14%) பெற்ற திமுக, சட்டமன்றத்தில் ராஜாஜி கட்சிக்கு
அடுத்து 3-வது இடத்தில் அமர்ந்தது. சட்டமன்ற திமுக தலைவராக அறிஞர் அண்ணாவும், துணைத்தலைவராக அன்பழகனும், கொறடாவாக கலைஞரும்தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
1957 தேர்தல் கண்ணோட்டம்
மொத்த வாக்காளர்கள் 2,39,05,575
பதிவானவை 1,11,30,996 (46.56%)
மொத்த இடங்கள் 205
காங்கிரஸ் 151 (45.54%)
சீர்திருத்த காங்கிரஸ் (ராஜாஜி) 16
திமுக 15
இந்திய கம்யூ 4
பிரஜா சோசலிஸ்டு 2
சோசலிஸ்டு கட்சி 2
பார்வர்டு பிளாக் 2
சுயே 13
(அண்ணா, கலைஞர் சேர்ந்து இருக்கும் படம்)
குளித்தலை
மொத்த வாக்குகள் 89,574
பதிவானவை 48,149
கலைஞர் (திமுக) 22,785 (47.32%)
கேஏ தர்மலிங்கம் (காங்) 14,489(30.09%)
காஞ்சீபுரம்
மொத்த வாக்குகள் 91.027
பதிவானவை 61,345
சிஎன் அண்ணாதுரை (திமுக) 31,861(51.94%)
சீனிவாசன் (காங்) 20,718(33.77%)
சாத்தூர்
(1954 இடைத்தேர்தலில் குடியாத்தத்தில் போட்டியிட்டு முதல்-அமைச்சர் ஆன
காமராஜர், 1957 தேர்தலில் சாத்தூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்).
மொத்த வாக்குகள் 90,740
பதிவானவை 68,083
காமராஜர் (காங்) 36,400 (53.46%)
ஜெயராம ரெட்டியார் (சுயே) 31,683 (46.54%)
எழும்பூர்
(அன்பழகன் படம்)
மொத்த வாக்குகள் 88,666
பதிவானவை 39,166
க. அன்பழகன் (திமுக) 20,293 (51.81%)
ராதாகிருஷ்ணன் (காங்) 16,529 (42.20%)
திமுகவின் நாடாளுமன்ற பிரவேசம்
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் 371 இடங்களில் வெற்றி பெற்று நேரு மீண்டும்
பிரதமர் ஆனார்.
தமிழ்நாட்டில் மொத்த இடம் 41
காங்கிரஸ் 31
திமுக 2
இந்திய கம்யூ 2
பார்வர்டு பிளாக் 1
சுயே 5.
(திமுகவின் ஈவெகி சம்பத்தும், தர்மலிங்கமும் நாடாளுமன்ற பிரவேசம்
செய்தனர்).
(கட்டுரைத் தொகுப்பு: மணிராஜ்