தமிழக சட்டசபை தேர்தல் வரலாறு (1971)-காங். உடைந்தது/தி.மு.க. சாதனை
1 min read
Tamil Nadu Assembly Election History (1971)-Congress. Broken/DMK. Achievement
11.4.2026
மதராஸ் மாகாண சட்டமன்றம் என்ற அவலம் நீங்கிய பிறகு தமிழ்நாடு சட்டமன்றம் சந்தித்த முதல் தேர்தல் 1971-ம் ஆண்டில் தான். இந்தத் தேர்தல் 1972-ல் தான் நடந்திருக்க வேண்டும். ஆனால் ஓராண்டு முன்னதாகவே நடத்தப்பட்டது.
அதற்கு அரசியல் ரீதியாக நிறைய காரணங்கள் இருந்தன. 1967-க்குப்பிறகு தமிழக
அரசியலிலும், தேசிய அரசியலிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன.
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து விட்டது. இந்திரா காந்தி தலைமையில் ஒரு கட்சியும் (இந்திரா காங்கிரஸ்), காமராஜர், மொரார்ஜிதேசாய், நிஜலிங்கப்பா போன்ற பழைய காங்கிரஸ் தலைவர்கள்
அங்கம் வகித்த ஒரு கட்சியும் (ஸ்தாபன காங்கிரஸ்) செயல்படத்தொடங்கின.
இருகட்சிகளும் இண்டிகேட், சிண்டிகேட் என்று ஒன்றையொன்று கிண்டலடித்துக் கொண்டன.
காங்கிரஸ் பிளவுக்கு காரணமே, ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் சஞ்சீவரெட்டியை எதிர்த்து, விவி கிரியை நிறுத்தி வெற்றி பெறச்செய்த இந்திரா காந்தியின் செயல் தான்..
காமராஜரால் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்ட இந்திராகாந்தி, காமராஜருக்கு எதிராகவே அரசியல் செய்தார்.

அதேநேரம் வங்கிகள் தேசிய மயம், மன்னர் மானியம் ஒழிப்பு போன்ற முற்போக்குத் திட்டங்களை செயல்படுத்தி இந்திராகாந்தி அதிரடி காட்டினார்.
ஓராண்டு முந்திய தேர்தல்
எனவே ஓராண்டு முன்னதாகவே நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு
தேர்தல் நடத்த முடிவெடுத்தார்.
ஆனால் தமிழ்நாட்டில் இந்திராகாங்கிரசுக்கு ஆளே கிடையாது. காங்கிரஸ் என்றாலே இங்கு காமராஜர் தான் என்ற நிலை இருந்தது. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு நேர் எதிரி காமராஜரின் பழைய காங்கிரஸ் தான்.
அப்படிப்பட்ட நிலையில் முதல்-அமைச்சர் கருணாநிதி, இந்திராவுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்.
தமிழ்நாட்டிலும் சட்டமன்றத்தை ஓராண்டு முன்னதாகவே கலைத்து விட்டு தேர்தல் நடத்த முன்வந்தார்.
1971 மார்ச் மாதம் தேர்தல் நடந்தது. திமுக, இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, பிரஜா சோசலிஸ்டு, பார்வர்டு பிளாக், முஸ்லிம் லீக், தமிழரசு கழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன.
காமராஜருடன் கொண்டிருந்த பகையை மறந்து ராஜாஜி அவருடன் அணி சேர்ந்தார்.
காமராஜரின் பழைய காங்கிரஸ், சுதந்திரா, சம்யுக்த சோசலிஸ்டு, தமிழ்நாடு தொழிலாளர் கட்சி (டாய்லர்ஸ் பார்ட்டி), குடியரசு கட்சி, கோவை மாவட்ட விவசாயிகள் சங்கம் ஆகியவை எதிர் அணி அமைத்தன.
திமுக கூட்டணியில் இ.காங்கிரசுக்கு சட்டமன்றத் தொகுதிகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. மாறாக, நாடாளுமன்றத்துக்கு மட்டும் 9 தொகுதிகள்
கொடுக்கப்பட்டன.
கணிப்புகளை பொய்யாக்கிய தேர்தல்
இந்தத் தேர்தலில் காமராஜர் அமைத்த அணியே வலுவான அணியாக கருதப்பட்டது.
காமராஜர் ஆட்சியைப் பிடிப்பார் என்று கூட அப்போதைய கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், எல்லாவற்றையும் அடித்துத்தகர்த்து விட்டு திமுக கூட்டணி இமாலய வெற்றி பெற்றது.
போட்டியிட்ட 203 இடங்களில் திமுக வென்ற இடங்கள் 184. தமிழக தேர்தல் வரலாற்றில் இந்த சாதனை இன்று வரை முறியடிக்கப்படவே வில்லை.
திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு 8, பார்வர்டு பிளாக் 7,
முஸ்லிம் லீக் 2 இடங்களை வென்றன.
ஆட்சியைப்பிடிக்கும் எனப் பேசப்பட்ட பழைய காங்கிரஸ் 201ல் போட்டியிட்டு 15 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதோடு கூட்டு சேர்ந்த சுதந்திரா 19ல் போட்டியிட்டு 6 இடங்களை வென்றது.
திமுக அணியின் வாக்குகள் 85,06,078 (54.30 சதவீதம்), பழைய காங்கிரஸ் அணி 55,79,039
(37.94 சதவீதம்).
வரலாற்றுச்சிறப்பு மிக்க வெற்றி பெற்ற திமுகழக அரசு, கருணாநிதி தலைமையில் மீண்டும் அமைந்தது.
“உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்” என்ற முழக்கத்துடன் மத்திய அரசுடன் நல்லிணக்கத்துடன் செயல்பட்ட முதல்-
அமைச்சர் கருணாநிதி, சேலம் உருக்காலை போன்ற திட்டங்களை தமிழ்நாட்டுக்கு வாதாடிப்பெற்றார்.
‘நீராருங்கடலுடுத்த’ தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை அரசு நிகழ்ச்சிகளில்
இடம் பெற வைத்தது, கண்ணொளித்திட்டம், குடிசை மாற்று வாரியம், கை ரிக்ஷாக்களை ஒழித்து விட்டு சைக்கிள் ரிக்ஷா வழங்கியது, பெண் போலீஸ்
நியமனம் போன்ற திட்டங்கள் அவர் கொண்டு வந்தவை தான்.
இன்று சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் முதல்-அமைச்சர்கள் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்றுக்கொடுத்தவரும் அவரே. ஆனால் அரசியல் எப்போதும் சுமுகமாக இராது அல்லவா? அதற்கு ஏற்ப ஆட்சியிலும், கட்சியிலும் மிகப் பெரிய அளவில் சோதனைகளை கருணாநிதி சந்தித்தது
இந்த கால கட்டத்தில் தான்.
கலைஞரின் நெருங்கிய நண்பராக இருந்த எம்ஜிஆர், அவருக்கு எதிராக நின்றதால் கட்சி பிளவுபட்டது. அடுத்தடுத்து திமுகவுக்கு
சோதனைக்காலமாகவே அமைந்தது.
(அவற்றின் தொடர்ச்சியாக வந்த 1977 தேர்தல் நிலவரத்தை அடுத்து
காணலாம்).
—
1971 தேர்தல் கண்ணோட்டம்
பதிவான மொத்த வாக்குகள் 1,57,56,801
மொத்த இடங்கள் 234
திமுக 184/203 (76,54,935; 48.58%)
இந்திய கம்யூ. 8
பார்வர்டு பிளாக் 7
பிரஜா சோசலிஸ்டு 4
மு.லீக் 2
காங்கிரஸ் 15/201 (55,13,894; 34.99%)
சுதந்திரா 6
சுயே 8.
===

மீண்டும் கருணாநிதி;
பரங்கிமலையில் எம்.ஜி.ஆர்
சைதாப்பேட்டை:
மொத்த வாக்குகள் 1,77,248
பதிவானவை 1,16,290
கலைஞர் கருணாநிதி (திமுக) 63,334 (54.46%)
குடந்தை ராமலிங்கம் (ப.காங்) 50,823 (43.70%)
பரங்கிமலை:
எம்ஜிஆர் (திமுக) 65,405 (61.11%)
ரகுபதி (ப. காங்) 40,773 (38.10%)
மத்தியில் மீண்டும் இந்திராகாந்தி
1971 நாடாளுமன்த் தேர்தலில் இ.காங்கிரஸ் 352 இடங்களில் வென்றது.
இந்திராகாந்தி மீண்டும் பிரதமர் ஆனார்.
தமிழ்நாட்டில் மொத்த இடம் 39
திமுக 23
இ.காங். 9
சிபிஐ 4
மு.லீக் 1
பார்வர்டு பிளாக் 1
ப.காங். 1
நாகர்கோவிலில் காமராஜர் வெற்றி

1971 ல் பெருந்தலைவர் காமராஜர் சட்டமன்றத்திற்கு போட்டியிடவில்லை. மாறாக, நாகர்கோவில் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு
போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அந்த தேர்தலில் பழைய காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்பி அவர்
மட்டுமே.
(இதற்கு முன் 1969ல் நாகர்கோவில் இடைத்தேர்தலிலும் காமராஜர் வெற்றி
பெற்று எம்பி ஆனது குறிப்பிடத்தக்கது).
(கட்டுரைத்தொகுப்பு மணிராஜ்)
