June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாட்டின் உரிமைக்காக களத்தில் நிற்பேன்; சண்டை செய்வேன் – மு.க.ஸ்டாலின் பேச்சு

1 min read

I will stand on the field for the rights of Tamil Nadu; I will fight – M.K. Stalin’s speech

14.4.2026
வேலூர் கந்தனேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லி ஆதிக்கத்துக்கு எதிராக தீர்ப்பு எழுத உங்கள் ஆதரவு வேண்டும். திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பதே மக்கள் விருப்பம். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய நீங்க ரெடியா? இது நமக்கான காலம். இறங்கி ஆட நான் தயாராக இருக்கிறேன்.

மத்திய அரசு சொன்னபடி தென் மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாட்டை பின்பற்றின; ஆனால், அதுவே ஆபத்தாக மாறும் வகையில் தொகுதி மறுசீரமைப்பை இன்று மத்திய அரசு கொண்டு வருகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக மத்திய அரசு நம்மை தண்டிக்கப் பார்க்கிறது. சதித் திட்டத்தை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் சட்டமாக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாடு என்பது 8 கோடி மக்களின் உரிமைக்குரல். மத்திய பாஜக அரசு செய்த பாசிச வேலை குறித்து பேசினால் மத்திய மந்திரி பியூஷ் கோயல் திமிர்த்தனமாக பேசுகிறார். பியூஷ் கோயல் நாவை அடக்கி பேசுங்கள். தமிழ்நாட்டு பாஜகவுக்கு மட்டும்தான் நீங்கள் பொறுப்பாளர். மரியாதை கொடுத்தால் தான் திரும்ப மரியாதை கிடைக்கும்.

தமிழ்நாட்டின் குரல்வளையை நெருக்க முயற்சித்தால் சும்மா இருக்க மாட்டோம். பிரதமர் அவர்களே இறுதி எச்சரிக்கை கொடுத்து விட்டோம். நெருப்போடு விளையாட வேண்டாம். தமிழ்நாட்டைப் பற்றி பாஜக தவறாக எடை போட்டு இருக்கிறது. மோடி அவர்களே உங்கள் முன் கைகட்டி நிற்பவர்களை வைத்து தமிழகத்தை எடை போட வேண்டாம். தமிழர்கள் அறிவானவர்கள், சுயமரியாதைக்காரர்கள், டெல்லியின் ஆணவத்துக்கு தரும் பதில் பலமாக இருக்கும்.

தமிழ்நாட்டுக்காக, தமிழ் இனத்துக்காக போராட பெரியார், காமராஜர் இல்லை என நினைக்க வேண்டாம். அவர்களின் முழு உருவமாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். தமிழ்நாட்டின் தன்மானம், உரிமைக்காக இந்த ஸ்டாலின் களத்தில் நிற்பேன்; சண்டை செய்வேன். தமிழ்நாட்டை ஒருபோதும் குறைத்து எடை போடாதீர்கள். தமிழினத்தின் உரிமைக்காக கடைசி மூச்சுவரை போராடுவேன்.

சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றால் திராவிட மாடல் ஆட்சி வலிமையாக உள்ளதால்தான். ஒவ்வொரு திட்டத்தில் கையெழுத்திடும்போதும் லட்சக்கணக்கான மக்களின் மகிழ்ச்சி தான் என் கண்முன் இருக்கும்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்தியது திமுக. பேரணி நடத்திய என் மீதும் 8,000 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது பழனிசாமி ஆட்சி. குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் அதிமுக வாக்களித்தது. அதிமுக எதிர்த்து வாக்களித்து இருந்தால் சிஐஏ சட்டமே நடைமுறைக்கு வந்திருக்காது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *