காதலனுடன் மாணவி தற்கொலை
1 min read
Student commits suicide with boyfriend
14.4.2026
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே நெடுங்கூர் கிராமத்தில் காட்டுப்பகுதியில் ஒரு மரத்தில் வாலிபர், சிறுமி ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதைகண்ட அந்த வழியாக சென்றவர்கள் சிறுகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிணமாக கிடந்தவர்கள் மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி (27 வயது), சமயபுரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகள் ஹரிஷ்மா (15 ) என தெரிய வந்தது. இதில் ஹரிஸ்மா 10-ம் வகுப்பு படித்து வந்தார். அழகர்சாமியும், ஹரிஷ்மாவும் காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் ஹரிஷ்மாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிஷ்மா வீட்டை விட்டு வெளியே சென்று, அழகர்சாமியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து சிறுகனூர் போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரிஷ்மா காணாமல் போனது குறித்து மணப்பாறை போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.