3வது முறையாக மாநிலங்களவை துணை தலைவரானார் ஹரிவன்ஷ்- பிரதமர் மோடி வாழ்த்து
1 min read
Harivansh becomes Deputy Chairman of Rajya Sabha for the 3rd time – PM Modi congratulates him
17.4.2026
நாடாளுமன்ற மாநிலங்களவையின் துணைத்தலைவராக இருந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங்கின் எம்.பி. பதவிக்காலம் ஏப்ரல் 9-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து அவரை நியமன உறுப்பினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார். அவரது பத்திரிகைத்துறை பணியை பாராட்டி இந்த நியமனம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரிவன்ஷ் மீண்டும் எம்.பி.யாக பதவியேற்றார்.
முன்னதாக இவரது பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மாநிலங்களவை துணைத்தலைவர் பதவியும் காலியானது. அந்த பதவிக்கு விதிமுறைப்படி இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடத்தப்பட்டது. துணைத் தலைவர் பதவிக்கு ஹரிவன்ஷ் நாராயண் சிங் பெயரை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக முன்மொழிந்தது. அதன்படி அவர் மீண்டும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
துணைத் தலைவராக ஹரிவன்ஷை தேர்ந்தெடுப்பதற்கு ஆதரவாக ஐந்து முன்மொழிவு அறிவிப்புகள் பெறப்பட்டன. எதிர்க்கட்சிகளிடம் இருந்து எந்த அறிவிப்பும் பெறப்படவில்லை. இதனால் ஹரிவன்ஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 3-வது முறையாக மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஸ் நாராயண் சிங்கிற்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “ஹரிவன்ஷ் தொடர்ச்சியாக 3வது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அவரது மீது சபை வைத்துள்ள நம்பிக்கையையும், அனைவரையும் ஒன்றிணைத்து செல்வதற்கான முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது. இது அவரது அனுபவத்திற்கு கிடைக்கும் மரியாதையாகும். அவரது பதவிக்காலத்தில் சபையின் அதிகாரம் வலுப்பெறுவதையும் நாங்கள் கண்டிருக்கிறோம். ஹரிவன்ஷின் தலைமையில் இந்த அவையின் செயல்பாடு மேலும் வலுப்பெற்று, மிகுந்த செயல்திறன் மிக்கதாக மாறியிருப்பதை நாம் அனைவரும் கண்டுள்ளோம்” என்று கூறினார்.
துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஹிரிவன்ஷ், எதிர்க்கட்சியை அரவணைத்து, அவையில் விவாதம் நடத்துவதற்கு அவர்களுக்கு போதுமான நேரத்தை ஒதுக்குவார் என்று நம்புவதாக கார்கே குறிப்பிட்டார்.