June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தோரணமலையான் விருது பெற்றார், கல்யாணி சிவகாமி நாதன்

1 min read

Kalyani Sivagami Nathan received the Thoranamalaiyan award

17-.4.2026
கடையம் திருவள்ளுவர் கழக செயலாளருக்கு தோரணமலையான் விருது வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள தோரணமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்த பெற்றது. இங்கு இயற்கையாய் அமைந்த குகைக்குள் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இந்த கோவில் அறங்காவலராக இருக்கும் ஆ.செண்பகராமன் இறைபணியோடு அறப்பணியையும் செய்து வருகிறார். அடிவாரத்தில் இலவச நூலகம் உள்ளது. இங்கு அரசு தேர்வுக்காக மாணவர்கள் இலவசமாக தங்கி பயின்று வருகின்றனர்.
தோரணமலையில் நடைபெறும் விழாவில் சித்திரை விசு திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு பராபவ புத்தாண்டு விழா நடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது.
இந்த விழாவில் விவசாயிகள் கவுரவிக்கப்படுவார்கள். அதேபோல் சாதனையாளர்களுக்கு தோரணமலையான் விருது வழங்கப்படும்.
அதேபோல் இந்த ஆண்டும் தமிழ்புத்தாண்டு சிறப்பாக கொண்டடப்பட்டது. காலையில் கணபதி ஹோமம் நடந்தது. அதன்பின் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடந்தது. இதனை அடுத்து விவசாய கருவிகளுக்கும் காளை மாடுகளுக்கும் பூஜை நடந்தது. அதன்பின் விவசாயிகள் கவுரவிக்கப்பட்டனர்.
இதனை அடுத்து சாதனை புரிந்தவர்களுக்கு தோரணமலையான் விருது வழங்கப்பட்டது. கடையம் திருவள்ளுவர் கழக செயலாளரும் பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியருமான கே.எஸ்.கல்யாணி சிவகாமி நாதனுக்கு விருது வழங்கப்பட்டது. (இவர் தலைமை பொறுப்பேற்று கடையம் சிவன்கோவில், கல்யாணி அம்மன் கோவில், முப்புடாதி அம்மன் கோவில்களுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார்.)
இந்த விருதை திருநெல்வேலி அகிலபாரதீய விஸ்வகர்ம ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ புத்தாத்மானந்தா சரஸ்வதி பரமாச்சாரிய சுவாமிகள் 39-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீமத்பரசமய கோளரி நாதஆதீனம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி பீடம் வழங்கினார்.
பொன்னாடை போர்த்தினார்.
மேலும் அகத்தியர் சுவடி க.முத்துகுமார சுவாமி, சமூக பணி மற்றும் நடிகர் வேலாயுத பாண்டியன், மருத்துவ பணி மணிகண்டன், கல்விப்பணி வேலாயுத சுந்தரராமன், ஆன்மிக பணி உமா துரைச்சி, எழுத்துப்பணி தூத்துக்குடி மாரிமுத்து, தாமிரபரணி மீட்டெடுத்தல் ராமசந்திரன் என்ற சந்ரு, வர்ணனையாளர் சரவணகுமார், பட்டி மன்ற நடுவர் முனைவர் இராம பூதத்தான், வரலாற்று எழுத்தாளர் சாந்தி பிரபு, தாமிரபரணி தூர் வாரும் பணி பொன்னன்குறிச்சிதுரை, இலக்கிய பேச்சாளர் மணிமொழிச்செல்வன், பத்திரிக்கை துறை தம்பான், கோவில் பரமாரிப்பு பணி அந்தமான் சுந்தர், நாடகப்பணி காளிமுத்து ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
விருது பெற்றோர்களை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அறிமுகம் செய்தார். நிகழ்ச்சியில் லோட்டஸ் முருகன், தன்னூத்து குமரன், பாப்பாக்குடி செல்வமணி, அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர் சுப்பையா, வர்ணனையாளர் பிரபு உள்பட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கோளரி நாத ஆதினம் ஆசியுரை கூறினார்.
பின்னர் முத்துமாலைபுரம் கே.ஆதிநாராயணன்-சந்திரலீலா மாலைநேர கட்டணமில்லா படிப்பக மாணவ-மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது. விளக்கு பூஜையும் நடந்தது.
விழாவில் காலைமுதல் மாலை வரை தொடர்ந்து அன்னதானம் நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன்செய்திருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *