மோடியின் உரை தேர்தல் நடத்தை விதி மீறியதாகும்- சிபிஐ எம்.பி. தேர்தல் ஆணையருக்கு கடிதம்
1 min read
Modi’s speech violates election code of conduct – CBI MP writes letter to Election Commissioner
19/4/2026
நாரி சக்தி வந்தன் அதினியம் திட்டத்தின் கீழ் மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்குமான அரசியலமைப்புத் திருத்த மசோதா மக்களவையில் தோல்வியடைந்ததை அடுத்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இது தொடர்பாக சிபிஐ எம்.பி. சந்தோஷ் குமார் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நேரத்தில் பிரதமர் ஆற்றிய உரை, அரசியல் தன்மை வாய்ந்தது. தீவிர அரசியல் போட்டிக்கு உட்பட்ட ஒரு பிரச்சினையில் பொதுமக்களின் கருத்தை பாதிக்கும் நோக்கில் ஒரு தலைபட்சமான கருத்துக்களையும், தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துக்களையும் கொண்டிருந்தது.
தூர்தர்ஷன் மற்றும் சன்சத் டிவி போன்ற பொதுத் தளங்களில் இந்த உரையை ஒளிபரப்பியது, அரசின் வளங்களை தவறாகப் பயன்படுத்துவதற்குச் சமம்.
அடிப்படையில் ஒரு அரசியல் உரையாக இருக்கும் ஒரு விஷயத்திற்கு, பொது நிதியில் இயங்கும் தளங்களை பயன்படுத்துவது தேர்தல் விதிமுறைகளின் கடுமையான மீறலாகும்.
தேர்தல்களின் போது தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டிய சம வாய்ப்பு சூழலை இத்தகைய நடவடிக்கைகள் சீர்குலைக்கின்றன. நடவடிக்கை எடுக்கத் தவறினால், ஆணையத்தின் நடுநிலைமை மீதான பொதுமக்களின் நம்பிக்கை சிதைந்து, நிறுவன ரீதியான உடந்தையை அது வெளிப்படுத்தக்கூடும்.
தேர்தல் செயல்முறையின் புனிதத்தை பாதுகாக்க, ஆணையம் உடனடி மற்றும் நேர்மையான நடவடிக்கை எடுக்கவும். இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடங்கவும், பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும்.
இவ்வாறு சிபிஐ எம்.பி. சந்தோஷ் குமார் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது உரையில், “காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும், அவையில் நாடு முழுவதின் முன்னிலையில் நேர்மையான உழைப்பின் கருக்கொலையை செய்துள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி போன்ற கட்சிகள் இந்த கருக்கொலைக்கு குற்றவாளிகள்” என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.